விளையாட்டு

“இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெறாததை நம்ப முடியவில்லை” - ஸ்ரீகாந்த்

ஆர்.முத்துக்குமார்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று ஆர்சிபியின் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஷ் ஹாசில்வுட் ஆகியோரின் பிரமாதமான ஸ்விங் பவுலிங்கில் எந்த அணியும் மடியாத அளவுக்கு மடிந்தது. 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகு எப்படியோ 75 வரை வந்து ஆர்சிபி அதை வெகு எளிதாக 6.3 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது.

புவனேஷ்வர் குமார் 3 ஓவர் 5 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தினார். அதுவும் 2-வது பந்திலேயே சஹில் பரேக் என்ற பேட்டரை இன்ஸ்விங்கிங் யார்க்கரில் குச்சியை கழற்றியது நடப்பு ஐபிஎல் தொடரில் அதியற்புதமான பந்து என்றால் மிகையாகாது. ஷமி அன்று ஜூரெலை எடுத்த டெஸ்ட் கிளாஸ் அவுட் ஸ்விங்கரை விட இது ஆகச் சிறந்த பந்து என்றே கூற வேண்டும்.

பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் எட்ஜ் ஆக்கியும் கேப்டன் அக்சர் படேலை அருமையான உள்ளே வந்து வெளியே சென்ற பந்தில் எட்ஜ் ஆக்கியும் வீழ்த்தி சுல்தான் ஆஃப் ஸ்விங் ஆகத் திகழ்ந்தார்.

இதுவரை 8 போட்டிகளில் புவனேஷ்வர் இந்த சீசனில் மட்டும் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் 7.61 என்று அபாரமாக உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரைப் புகழ்ந்து பேசும்போது, “இரண்டு பக்கமும் சும்மா பிரமாதமா ஸ்விங் பண்றார் புவனேஷ்வர். ஸ்டப்ஸ் போன்ற பிளேயரே ஒண்ணும் புரியாம அவுட் ஆறாரு. 2022 டி20 உலகக் கோப்பையில் அந்த ஒரு மேட்ச் அவர் சரியா போடல. ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு மேட்ச்லயும் அட்டகாசமா போட்டுருக்காரு.

ஐபிஎல் கிரிக்கெட்ல புவனேஷ்வர் குமார் நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கிறார். அவர் இந்திய அணியில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவிலை. புவனேஷ்வர் தன் முதல் ஸ்பெல்லிலேயே நிறைய போட்டிகளை நமக்கு வென்று கொடுத்திருக்கிறார். அவர் தன் ஸ்விங் பவுலிங் கலையை நன்றாகப் பயன்படுத்துகிறார்” என்றார் ஸ்ரீகாந்த்.

அதேபோல் ரொமாரியோ ஷெப்பர்ட் பற்றி கூறுகையில், “அவரை ஏன் ஆர்சிபி அணி பிளேயிங் லெவனில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. நேற்று நல்ல பவுலிங் சாதகமான நிலைகளில் கூட ரொமாரியோ 21 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். ஒருவேளை அவர் அணியில் இருந்தால் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறினார் ஸ்ரீகாந்த்.

SCROLL FOR NEXT