இன்றைய டி20 கிரிக்கெட் உலகில் பவுலர்களுக்கு பிட்ச்கள் உதவுவதில்லை, ஸ்பின்னர்கள் ஏறக்குறைய டி20 உலகிலிருந்து தூக்கி எறியப்பட்டு விட்டனர், இப்போது சில பல பெயர்கள் இருக்கிறதே தவிர ஸ்பின் என்னும் கலை செத்து விட்டது.
டி20 ஆதிக்கம் பெருகினால் பவுலிங் என்னும் கலையே இது போல் சீரழிந்து டெஸ்ட் போட்டிகள் வெறும் பேட்டிங் கோலமாக மட்டுமே மாறும் அபாயம் உள்ளது. ஆனால் இந்தக் காலக்கட்டத்திலும் பும்ரா போன்ற சில பவுலர்கள் ஸ்லோ பந்துகளை வெகு திறமையாகப் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் இந்த கிரிக்கெட் ஆட்டத்தின் உண்மையான வேறொரு பரிமாணம்.
லுங்கி இங்கிடி தன் பந்து வீச்சு ஆயுதத்தில் இப்போது ஸ்லோயர் ஒன்களை வெகுதிறமையாகப் பயன்படுத்தி அபாயகரமான பவர் ப்ளே பவுலராகத் திகழ்கிறார். சாம் கரன், மார்கோ யான்சென் கூட நடுவிரலை பந்துக்கு அடியில் கொடுத்து வீசும் knuckle பந்துகளை வீசக் கற்றுக் கொண்டு வருகிறார். ஆனால் இந்த மாற்றங்களிலும் மாறாமல் ஜொலிப்பவர் ஜஸ்பிரித் பும்ரா.
2018 பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் போட்டியில் ஷான் மார்ஷ் அருமையாக ஆடிக்கொண்டிருந்தவரை திடீரென ஒரு ஸ்லோ பந்தை வீசி திடுக்கிடச் செய்து வீழ்த்தினார் பும்ரா. எனவே இந்த ஸ்லோ பந்துகள் வெறும் ரன் கட்டுப்படுத்தும் உத்தி மட்டுமல்ல, விக்கெட்டுகளை வீழ்த்தும் உத்தி. ஒருநாள், டி20, டெஸ்ட் என்ற எந்த வடிவமாக இருந்தாலுமே விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதுதான் போட்டியின் தன்மையையே மாற்றும் சக்தி கொண்டது.
ஷான் மார்ஷிற்குப் பிறகு பும்ராவின் ஸ்லோயர் பந்துகளில் ஆகச்சிறந்தது முகமது ரிஸ்வானுக்கு வீசியது, ஆலி ராபின்சனுக்கு தொடர் யார்க்கர்களை வீசியது. இதோடு இந்த உலகக்கோப்பையில் ஹாரி புரூக்கிற்கு அரையிறுதியில் வீசிய ஸ்லோ பந்து, இறுதியில் ரச்சின் ரவீந்திராவுக்கு இறுதிப் போட்டியில் வீசிய ஸ்லோ பந்துகள் உண்மையில் பேட்டர்களை திகைப்படையச் செய்து நிலைகுலையச் செய்தவை.
ஏன் பும்ராவின் ஸ்லோ பந்துகள் ஆட முடியாதவையாக இருக்கின்றன என்றால் அவர் வேகமாக வீசும் பந்துகள் மட்டையை மிக வேகமாகத் தாக்கக் கூடியவை என்பதாலேயே. இப்போது இரண்டையும் கலவையாகக் கூட பும்ரா வீசுவதில்லை. ஓவரின் முதல் பந்தையே ஓடி வந்து கையை சுற்றும் வேகத்தையும் மெதுவாக்காமல் அதே ஸ்பீடுடன் பந்தை மட்டும் ஸ்லோவாக்குகிறார் என்றால் எப்படி ஆட முடியும்? அதுதான் பும்ராவின் ஸ்லோ பந்துகளின் தனித்த விசேடம்..
பும்ராவின் ஸ்லோ பந்துகளின் விசேட பலத்திற்கான எளிய ஆதாரமாக ஒன்றைச் சுட்டலாம் ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ புள்ளி விவரங்களின் படி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வீசிய ஸ்லோபந்துகள் மொத்தம் 31 அதில் இந்தியா எடுத்த ரன்கள் 90. மாறாக 21 பந்துகளை பும்ரா ஸ்லோ பந்துகளாக வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அதுவும் கிட்டத்தட்ட 390-400 ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகளில் பும்ராவின் ஸ்லோ பந்துகள்தான் எதிரணியைத் திக்குமுக்காடச் செய்தது. முரளிதரன் வேகமாக ஓடி வந்து ஆஃப் ஸ்பின் போட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பும்ராவின் ஆஃப் கட்டர் ஸ்லோ பந்துகள் உள்ளன.
ஆகவே பும்ராவின் பந்து கிரிப், அவரது பவுலிங் ஆக்ஷன், அல்லது கையை வேகமாகச் சுழற்றுவது ஆனால் பந்து மெதுவாக வருவது இதுதான் அவரது ஸ்லோ பந்துகளின் தாரக மந்திரம். பேட்டர்கள் இதனைக் கணிப்பது மிகமிகக் கடினம். கைகளில் வித்தையை வைத்திருக்கிறார் பும்ரா.