விளையாட்டு

“பும்ரா என் ஆசான்” - வேகப்புயல் மயங்க் யாதவ் நெகிழ்ச்சிப் பதிவு

ஆர்.முத்துக்குமார்

இந்திய அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் தனது காயங்களிலிருந்து மீள்வதில் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆகவே பும்ரா தனக்கு ஒரு ஆசிரியர் போன்றவர் என்கிறார் மயங்க் யாதவ்.

சமீபத்தில் ஜியோஸ்டாரின் ‘IPL Today Live’ நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாகக் கூறிய போது, “அறுவை சிகிச்சைக்கு பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் நான் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை. மீட்பு அமர்வுகளைத் தவிர்த்துவிடுவேன். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீட்பு, உணவு முறைகள் மற்றும் தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.

          

நான் என் உடலை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ அந்த அளவுக்கு அது மைதானத்தில் எனக்கு ஆதூரமாக விளங்கும். பும்ரா எனக்கு இந்த விஷயத்தில் ஒரு ஆசிரியரைப் போல. அவருக்கும் இதே மாதிரியான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மீண்ட பிறகு எப்படி திரும்ப வேண்டும், உடல் எப்படி எதிர்வினை அளிக்கும் என்பது குறித்து அவர் தனது அனுபவங்களை பகிர்ந்தார். சில நேரங்களில் உடல் நன்றாக இருக்கும், சில நேரங்களில் அப்படியில்லை, இதை அவர் முன்கூட்டியே விளக்கினார்.

வேகப்பந்துவீச்சு எப்போதும் சவாலானது. உடல் மற்றும் மனதிற்கு அதிக அழுத்தம் ஏற்படும். தெருவில் விளையாடும்போது ஸ்பின் போடத் தெரியாது, அதனால் நான் எப்போதும் வேகமாகவே பந்துவீசுவேன். என் தந்தை எனக்கு வேகப்பந்துவீச்சு வீடியோக்களை காட்டுவார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் இந்தியா விளையாடும் போட்டிகளை அதிகமாகப் பார்த்தேன்.

அப்போது மோர்னி மோர்கெல், டேல் ஸ்டெய்ன் ஆகியோரின் பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடித்தது. அவர்களால்தான் வேகப்பந்துவீச்சில் எனக்கு ஆர்வம் உருவானது,” என்று மயங்க் யாதவ் தெரிவித்தார்.

மயங்க் யாதவுக்கு இப்போது வயஹ்டு 23 தான் ஆகிறது. 2024 ஐபிஎல் தொடரில் காயம் அடைந்ததுடன், பின்னர் ஏற்பட்ட முதுகு பிரச்சினையால் 2025 ஐபிஎல் முழுவதையும் தவறவிட்டார். தற்போது பெங்களூருவில் உள்ள திறன் மையத்தில் புனர் சிகிச்சையை முடித்த அவர், 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்க உள்ளார்.

SCROLL FOR NEXT