நெய்மர்
சென்னை: சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவித்துள்ளார்.
“தேசிய அணி உடனான எனது காலம் நிறைவு பெற்றது. நான் வரலாறு படைத்தேன். நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் எனது ஆன்மாவை கொடுத்தேன். ஆனால், இப்போது அது வேண்டாம் என்று கருதுகிறேன்” என சாண்டோஸ் கிளப் அணிக்காக விளையாடிய பிறகு செய்தியாளர்களிடம் நெய்மர் தெரிவித்தார். இதில் வெனிசுலாவின் யுசிவி அணியை 4-2 என சாண்டோஸ் வீழ்த்தியது.
அண்மையில் நிறைவடைந்த ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணிக்காக அவர் விளையாடி இருந்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்காக அவர் களம் கண்டார். இருப்பினும் இரண்டு ஆட்டங்களில் வெறும் 37 நிமிடங்கள் மட்டுமே அவர் விளையாடினார். ஒரு கோலும் பதிவு செய்திருந்தார். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் நார்வே அணியிடம் தோல்வி அடைந்தது பிரேசில். அதுவே பிரேசிலுக்காக நெய்மர் விளையாடிய கடைசி போட்டி.
34 வயதான நெய்மர், பிரேசில் அணிக்காக கடந்த 2010 முதல் சர்வதேச அளவில் விளையாடி வந்தார். 130 ஆட்டங்களில் 80 கோல்களை பதிவு செய்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் பதிவு செய்த வீரராக அவர் அறியப்படுகிறார்.