விளையாட்டு

குன்ஹா, வின்சியஸ் ஜூனியர் அசத்தல்: ஹைதியை வெளியேற்றியது பிரேசில் | FIFA WC 2026

3-0 என்ற கணக்கில் அபார வெற்றி

செய்திப்பிரிவு

பிலடெல்பியா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள லிங்கன் ஃபைனான்சியல் பீல்டு மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில், ஹைதி அணியுடன் மோதியது.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரேசில் அணியின் முன்கள வீரரான ராபின்ஹா அசத்தலாக கோல் அடித்தார். ஆனால் அது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 23-வது நிமிடத்தில் ஆடுகளத்தின் மையப் பகுதியில் இருந்து பிரேசிலின் புருனோ கிமரைஸ் உதைத்த பந்து, வினிசியஸ் ஜூனியரின் கால்களுக்கு நேர்த்தியாக வந்து சேர்ந்தது.

பந்தைப் பெற்றுக் கொண்ட வினிசியஸ் ஜூனியர், மின்னல் வேகத்தில் ஹைதி அணியின் பெனால்டி பகுதிக்குள் கடத்திச் சென்றார். அவரைத் தடுக்க வந்த இரண்டு ஹைதி டிஃபென்டர்களையும் தனது சாதுரியமான உடல் அசைவுகளால் ஏமாற்றி, பந்தை கோல் வலையை நோக்கி வளைத்து அடித்தார்.

ஹைதி அணியின் கோல்கீப்பர் பிளாசிட் பந்தைத் தடுக்க முயன்றபோது, அது அவர் கைகளில் பட்டு நழுவியது. உடனே அங்கிருந்த ஹைதி தற்காப்பு வீரர் டெல்குராய்ஸ் பந்தை விலக்கி விட முயன்றார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக பந்து அங்கிருந்த பிரேசில் வீரர் மேதியஸ் குன்ஹாவின் மேல் பட்டு, மெதுவாக உருண்டு சென்று காலியாக இருந்த கோல் வலைக்குள் தஞ்சமடைந்தது. இதனால் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

36-வது நிமிடத்தில் பிரேசில் அணி 2-வது கோலை அடித்தது. மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்து பந்தை பெற்ற வினிசியஸ் ஜூனியர், மின்னல் வேகத்தில் பந்தைக் கடத்திக் கொண்டு எதிரணியின் எல்லைக்குள் சென்றார்.

அங்கு ஹைதி தற்காப்பு வீரர் ஜீன்-கெவின் டுவெர்னை அவரது இடத்தை விட்டு நகர்த்திய வினிசியஸ், மிக சாதுரியமாக மேதியஸ் குன்ஹாவை நோக்கி பந்தை தட்டிவிட்டார். பந்தைப் பெற்றுக்கொண்ட குன்ஹா கோல் வலையின் மேல் கார்னரை நோக்கி திணித்தார். இதனால் பிரேசில் 2-0 என தனது முன்னிலையை பலப்படுத்தியது.

முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் 45+3-வது நிமிடத்தில் மைதானத்தின் நடுப்பகுதியில் டேனிலோ கொடுத்த பாஸை, லூகாஸ் பகேட்டா சாமர்த்தியமாகத் தன் உடலைக் கடந்து செல்லவிட்டு, தன்னைத் தடுக்க வந்த ஹைதி வீரர் பெல்லேகார்டை ஏமாற்றி தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

அடுத்த நொடியே, ஹைதி அணியின் தற்காப்பு அரணை ஏமாற்றி, பந்தை காற்றில் லாவகமாகத் தூக்கி அடித்து வினிசியஸ் ஜூனியருக்கு அனுப்பினார். மின்னலாக செயல்பட்ட வினிசியஸ் ஜூனியர் பந்தைச் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 18 யார்டு பெனால்டி பாக்ஸிற்குள் நுழைந்தார்.

அங்கு ஹைதி கோல்கீப்பர் பிளாசிட் பந்தைத் தடுக்க முன்னேறி வந்தபோது, வினிசியஸ் ஜூனியர் நிதானமாகப் பந்தை கோல் வலையின் மையப்பகுதிக்குள் தள்ளினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. அதேவேளையில் ஹைதி அணியால் கோல் அடிப்பதற்கான முழு முயற்சி எடுக்கப்படவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் பிரேசில் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.

அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் மொராக்கோ அணிக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அதேவேளையில் 1974-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்த ஹைதி அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் ஹைதி நடப்பு தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியது.

வருகிறார் நெய்மர்: பிரேசில் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் களமிறங்குவதை அந்த அணியின் பயிற்சியாளர் அன்சிலோட்டி உறுதி செய்துள்ளார்.

கணுக்காலில் காயம் அடைந்திருந்த நெய்மர், நடப்பு தொடரில் முதல் 2 ஆட்டங்களில் விளையாடவில்லை. பிரேசில் அணிக்காக சர்வதேச அரங்கில் நெய்மர் 79 கோல்கள் அடித்துள்ளார்.

SCROLL FOR NEXT