விளையாட்டு

பிஹாரின் 574 ரன்களும், சூரியவன்ஷியின் அதிரடியும் எழுப்பும் கேள்விகள்!

ஆர்.முத்துக்குமார்

அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பிஹார் அணி 574 ரன்களை 50 ஓவர்களில் குவித்ததும், எழுச்சி பெறும் வருங்கால நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி சிக்சர்கள் உட்பட தனது 190 ரன்கள் எடுத்து உலக சாதனைகள் நொறுங்க ஆடும் பேயாட்டமும் உண்மையில் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று சிற்சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பிஹார் தன் உலக சாதனை ரன் எண்ணிக்கையில் 49 பவுண்டரிகள் 38 சிக்சர்களை விளாசியது. 574 ரன்களில் பவுண்டரிகளிலேயே 424 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. தரமற்ற நான்காம் தரப் பந்து வீச்சு, குட்டி மைதானம், இப்போது வீரர்கள் வைத்து ஆடும் மட்டை என்று ஏகப்பட்ட குளறுபடிகளால்தான் இத்தகைய சாதனைகள் நிகழ முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

38 அணிகளை மோதவிடுவது படுமோசமான முடிவாகும். இப்படிப்பட்ட கிரிக்கெட்டினால் தரமான வீரர்கள் கூட நல்ல தரமான பந்து வீச்சைத் திறம்பட ஆடும் தன்மையை இழந்துதான் விடுவார்கள். வைபவ் சூரியவன்ஷி தொடர்ந்து பலவீனமான அணிகளைப் போட்டு சாத்தி எடுத்து வருவது அவரது கரியருக்கு நல்லதல்ல.

அன்று யு-19 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் பவுலர் வீசிய நல்ல பந்துகளை அவரால் ஆட முடியாமல் ஆட்டமிழந்ததையேப் பார்த்தோம். அவரை விரைவில் சிகப்புப் பந்து முதல் தரக் கிரிக்கெட் பக்கம் ஆடவைத்து அவரது உண்மையான திறமை சோதிக்கப்பட வேண்டும், இப்போதைய அவரது அதிரடிகளைக் கொண்டு அவசரமாக் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு அழைத்து வந்தால் அவரது கரியரே கூட நாசமாகலாம்.

பிசிசிஐ-யின் லிஸ்ட் ஏ வடிவம் மட்டுமல்ல, பிரச்சினை இன்னும் ஆழமானது. ரஞ்சி டிராபி, டி20 உள்நாட்டுக் கிரிக்கெட் வடிவங்களும் தரமற்றவையாக மாறி வருகின்றன. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அருணாச்சல் அணி இதோடு 2-வது முறையாக 500 ரன்களை வாரி வழங்கியுள்ளது.

2022-ல் தமிழ்நாடு அணி 506 ரன்கள் குவித்தது, திரும்பவும் அருணாச்சல் அணி 435 ரன்களில் தோல்வி கண்டது. அன்று பிஹாருக்கு எதிராக 397 ரன்களில் படுதோல்வி. ரஞ்சியில் கடந்த சீசனில் கோவா அணிக்கு எதிராக அருணாச்சல் இன்னிங்ஸ் மற்றும் 551 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவுகிறது, அந்த அணி எந்த வடிவத்திற்காவது தகுதியுடையதுதானா?

மேகாலயாவின் ஆகாஷ் குமார் சிகப்புப் பந்து கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 8 சிக்சர்களை சூரத் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அடித்தார்.

அஸ்வின் இந்தப் பிரச்சனைகளை மிகச் சரியாகவே அவதானிக்கிறார், “வைபவ் சூரியவன்ஷிக்கு பெரிய கரகோஷங்கள். ஆனால் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். சில அணிகளின் தரம் படுமோசமாக உள்ளன. சிலப் போட்டிகள் போட்டிகளாகவே இல்லை. அது ஒரு நல்ல போட்டி அல்ல. வைபவுக்குப் பாராட்டுக்கள். அவர் பணியை அவர் செய்கிறார்.

அருணாச்சல் போன்ற அணிகள் நல்ல அணியாக உருப்பெற வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் இது போன்ற போட்டிகள் அந்த அணியின் தன்னம்பிக்கைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அஸ்வின்.

அருணாச்சல், நாகாலாந்து, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் என்று அணிகள் பெருத்து வருகின்றன. இந்த அணிகளுக்கு எதிராக சிற்சில வீரர்கள் அடித்து நொறுக்குகின்றனர். இதை வைத்துக் கொண்டு அவர்களை இந்திய டி20 அணிக்குள் விரைவில் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கருதும் போக்கு இப்போதெல்லாம் தொடர்ந்து குரல்களாக ஒலித்து வருகின்றன.

உள்நாட்டு கிரிக்கெட்டின் தரம்தான் சர்வர்தேச அரங்கில் எதிரொலிக்கும். ஆகவே பிட்ச், மைதானம், நிர்வாகம், அணித்தேர்வு, அணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை கறாராக அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் சர்வதேச அரங்கிற்கு வந்தார் என்பதற்காக சூரியவன்ஷியை இப்போதே சர்வதேச அரங்கிற்குக் கொண்டு வருவது நல்லதல்ல என்பதே கறாராக கிரிக்கெட்டை அணுகுபவர்களின் கருத்தாக இருக்கிறது.

சச்சின் எதிர்கொண்ட பந்து வீச்சுத் தரத்தை சூரியவன்ஷி இன்னமும் எதிர்கொள்ளவில்லை, ஆகவே அவருக்குச் சவால் அளிக்கும் உள்நாட்டு, இந்தியா ஏ, இந்தியா யு-19 போட்டிகளைக் கொண்டே அவரை அறுதியிட முடியுமே தவிர அருணாச்சல் அணிக்கு எதிராக, சொத்தை பவுலிங்குக்கு எதிராக குவிக்கும் ரன்களை வைத்து அவரை சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் விரைவில் கொண்டு வருவது அவரது வளர்ச்சிக்கு கெடுதலாக முடியலாம்.

SCROLL FOR NEXT