இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா

 
விளையாட்டு

“நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?” - IND vs BRA கால்பந்து ஆட்டத்தை விமர்சித்த பாய்சங் பூட்டியா

வேட்டையன்

கொல்கத்தா: ‘ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் கால்பந்து அணி உடன் இந்திய கால்பந்து அணி விளையாடுவதன் மூலம் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?’ என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா விமர்சித்துள்ளார்.

பிரேசில் கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது இந்திய கால்பந்து அணி உடன் நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் பிரேசில் அணியின் ‘ஏ’ பிரிவு சீனியர் வீரர்கள் விளையாடுவார்கள் என தகவல். இந்த ஆட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரேசில் அணியின் முன்னணி வீரர்கள் களமாடுவதை மைதானத்தில் நேரில் பார்க்க முடியும்.

இத்தகைய சூழலில் இந்த ஆட்டம் குறித்து பாய்சங் பூட்டியா, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“நான் அவர்கள் இங்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், எனது கருத்து என்னவென்றால் இந்திய கால்பந்து அணி தற்போதுள்ள நிலையில் இது தேவையா என்பதுதான். இதன் மூலம் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?

இந்தியன் சூப்பர் லீகில் இருந்து ஜாம்ஷெட்பூர் கால்பந்து அணி விலகி உள்ளது. இந்திய அணி ஆசிய போட்டியில் விளையாடுவது இல்லை. ஃபிபா தரவரிசையில் கிட்டத்தட்ட 140-வது இடத்தில் அணி உள்ளது.

அதோடு இந்த ஆட்டம் நடைபெறும் நாளில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஃபிபா ஆசியான் தொடரில் பங்கேற்று விளையாடும். அப்போது பிரேசில் உடன் இரண்டாவது அணியில் உள்ள வீரர்கள் விளையாடுவார்களா? அதனால் ஆட்டம் நடைபெறும் தேதியை மாற்ற வேண்டும்.

இந்த தருணத்தில் நமது கவனம் அணியை கட்டமைப்பதில் இருக்க வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம் வாழ்வாதாரத்துக்காக கடுமையாக போராடும் குடும்பத்தை சேர்ந்த மகனின் திருமணத்தில் ஷாருக்கானை நடனமாட கொண்டு வருவது போல உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து தங்களது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT