விளையாட்டு

ஐபிஎல் விளையாட்டு | அதிகரித்த விதி மீறல்கள் - கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய பிசிசிஐ!

ஆர்.முத்துக்குமார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் ஆட்சிக்குழு ஐபிஎல் அணிகளின் ஒழுக்கம், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அணிக் கட்டுப்பாடுகள் தொடர்பாக கடுமையான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏழு பக்கங்களைக் கொண்ட இந்த அறிவிப்பில், சில அணிகள் மற்றும் அணியுடன் தொடர்புடையவர்கள் பல்வேறு விதிமுறைகளை மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தால், அது ஐபிஎல் தொடருக்கும், சம்பந்தப்பட்ட அணிகளுக்கும், பிசிசிஐக்கும் பெரிய அளவில் கண்ணிய இழப்பை ஏற்படுத்தக்கூடும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பில் எந்த அணியையோ, வீரரையோ அல்லது நிர்வாகியையோ பெயரிட்டு குறிப்பிடவில்லை. ஆனால், அணியின் ஹோட்டல் அறைகளில் அனுமதி இல்லாத நபர்கள் தங்குவது, போட்டி நடைபெறும் நேரத்தில் அணி உரிமையாளர்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சிப்பது, மைதானத்தில் அல்லது ஓய்வறையில் இ-சிகரெட் புகைப்பது, அனுமதி இல்லாமல் வீரர்கள் ஹோட்டலை விட்டு வெளியே செல்வது போன்ற பல மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வெளியிட்ட அறிவிப்பில், சில வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள், அணி மேலாளரின் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை தங்களது ஹோட்டல் அறைகளுக்கு அழைத்ததாக கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி, யாரேனும் வீரர்களை அல்லது அணியினரை சந்திக்க வேண்டுமெனில், அது அணி மேலாளர் மூலம் அனுமதி பெற்று, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அணி மேலாளருக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இனிமேல் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட யாரேனும் வீரர்கள் அல்லது அணியினரை அறையில் சந்திக்க வேண்டுமெனில், எழுத்துப்பூர்வமான அனுமதி அவசியம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சந்திப்புகள் பெரும்பாலும் ஹோட்டல் லாபி பகுதியில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விளையாட்டு உலகில் ஊழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, அணிகளின் தனிப்பட்ட இடங்களில் அனுமதி இல்லாத நபர்கள் நுழைவதை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், சில அணிகளின் உரிமையாளர்கள் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போதே வீரர்களை அணுகி பேசுதல், கட்டிப்பிடித்தல் அல்லது உடல்ரீதியாக தொடர்பு கொள்ள முயன்ற சம்பவங்களையும் பிசிசிஐ கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது. போட்டி முடியும் வரை அணி உரிமையாளர்கள் டக்அவுட், உடைமாற்றும் அறை மற்றும் மைதானப் பகுதிகளுக்குள் சென்று வீரர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவது மிகவும் கடுமையான ஒழுங்கு மீறலாக கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மைதானம், உடைமாற்றும் அறை, டக்- அவுட், அணி ஹோட்டல் மற்றும் பயிற்சி பகுதிகளில் வேப், இ- சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் கடந்த மாதம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது டிரசிங் ரூமில் வேப்பிங் செய்ததை ஒப்புக்கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் வேப் மற்றும் இ-சிகரெட் பயன்பாடு சட்டப்படி தடை செய்யப்பட்டிருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவது ஐபிஎல் விதிமுறைகளை மீறுவதோடு சட்டரீதியான குற்றமாகவும் கருதப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT