சில்ஹெட்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி. பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியது. வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்களும், பாகிஸ்தான் 232 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலையைப் பெற்ற வங்கதேசம் 2-வது இன்னிங்ஸில் 390 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 137, லிட்டன் தாஸ் 69, மஹ்முதுல் ஹசன் ஜாய் 52 ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து 437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஷான் மசூத் 71, பாபர் அசம் 47, சல்மான் ஆகா 71 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தை முகமது ரிஸ்வான் 75 ரன்களுடனும், சஜித் கான் 8 ரன்களுடனும் தொடங்கினர். ஆனால் முகமது ரிஸ்வான் 94, சஜித் கான் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸ் 97.2 ஓவர்களில் 358 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி வங்கதேச அணி சாதனை படைத்தது. ஆட்டநாயகனாக லிட்டன் தாஸும், தொடர்நாயகனாக முஷ்பிகுர் ரஹிமும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டில் பாகிஸ்தான் சென்ற வங்கதேச அணி அங்கு 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது. தற்போது 2-வது முறையாக 2-0 என்ற கணக்கில் தாய்நாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.