அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 329 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி அபுதாபியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 346 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 240 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் பெற்ற முன்னிலையுடன் வங்கதேசம் 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 329 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வங்கதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 82, முஷ்பிகுர் ரஹீம் 81 ரன்கள் குவித்தனர். லிட்டன் தாஸ் 5 ரன்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளன. இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.