டார்வின்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது வங்கதேச அணி.
வங்கதேச கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டம் கடந்த 13-ம் தேதி டார்வினில் உள்ள மாராரா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணி முதல் இன்னிங்ஸில் 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி சார்பில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி 138 ஓவர்களில் 426 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
தன்ஸித் ஹசன் 101, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 84, மெஹிதி ஹசன் மிராஸ் 65 ரன்கள் சேர்த்தனர். அதன் மூலம் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 228 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை பின்னடைவுடன் எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 95.1 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி வீரரும் கிரீன் சதம் கண்டது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸ், இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
57 ரன்கள் இலக்கு
இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற 57 ரன்கள் என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய தன்ஸித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஷதாம் மற்றும் மொமினுல் இணைந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்த ஆட்டத்துக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி. ஆனால், அதே அணி இந்த போட்டியில் எழுச்சி கண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது. வரும் சனிக்கிழமை இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் தொடங்கவுள்ளது.
ஆட்ட நாயகன் ஹசன் மஹ்மூத்
முதல் இன்னிங்ஸில் 6 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 9 விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய வங்கதேச பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றி
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி, அதன் முதல் வெற்றியை இந்த ஆட்டம் மூலம் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
கடந்த 31 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி நீங்கலாக ஆசிய அணி ஒன்றிடம் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறை.