மிர்பூர்: வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹீம், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சதத்தை பதிவு செய்தார்.
38 வயதான முஷ்பிகுர் ரஹீம், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வீரர்களில் 11-வது வீரராக இப்போது அவர் அறியப்படுகிறார்.
அயர்லாந்து அணி உடனான இந்த போட்டியில் 195 பந்துகளில் அவர் சதம் கடந்தார். முதல் இன்னிங்ஸில் 214 பந்துகளுக்கு 106 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வீரர்களின் விவரம்: கொலின் கவுட்ரி - இங்கிலாந்து, ஜாவித் மியான்தத் - பாகிஸ்தான், கோர்டன் கிரீனிட்ஜ் - மேற்கு இந்தியத் தீவுகள், அலெக் ஸ்டீவர்ட் - இங்கிலாந்து, இன்சமாம் உல் ஹக் - பாகிஸ்தான், ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா, கிரேம் ஸ்மித் - தென் ஆப்பிரிக்கா, ஹசீம் ஆம்லா - தென் ஆப்பிரிக்கா, ஜோ ரூட் - இங்கிலாந்து, டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா, முஷ்பிகுர் ரஹீம் வங்கதேசம்.