லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அமெரிக்காவின் மெக்கன்னி பந்தை பராகுவேயின் பகுதிக்குள் பந்தை கடத்திச் சென்று இடதுபுறத்தில் இருந்த புலிசிக்கிற்கு லாவகமாக தட்டிவிட்டார்.
புலிசிக் இரண்டு டிஃபென்டர்களுக்கு இடையே லாவகமாக புகுந்து முன்னேறி, மூன்றாவது டிஃபென்டரையும் கடந்து தன் பக்கம் இழுத்து, பின்னர் பந்தை மெக்கன்னியின் லேட் ரன்னுக்காக பின்னோக்கித் தள்ளினார். அதை பெற்ற மெக்கன்னி இலக்கை நோக்கி பந்தை உதைத்த போது பராகுவே வீரர் பொபா டிலா பந்தைத் இடைமறித்து தட்டிவிட முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சுய கோலாக மாறியது.
இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுதுடன் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அதிகரித்தது. 28-வது நிமிடத்தில் புலிசிக், மெக்கன்னி ஆகியோரது உதவியுடன் பந்தை பெற்ற ஃபோலாரின் பலோகன் கோல் அடித்தார். ஆனால் இது நடுவரால் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த 3-வது நிமிடத்தில் அமெரிக்கா மீண்டும் கோல் அடித்தது.
31-வது நிமிடத்தில் இடது பக்கத்தில் இருந்து புலிசிக் கொடுத்த அட்டகாசமான பாஸை பெற்ற பலோகன், பெனால்டி பகுதி அருகே இருந்து, டைவ் அடித்த கோல்கீப்பர் கில்லைத் தாண்டி பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் அமெரிக்க அணி 2-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 5-வது நிமிடத்தில் சென்டர்-சர்க்கிளுக்கு அருகே பந்தை பெற்ற அமெரிக்காவின் மாலிக் டில்மேன், பராகுவே அணியின் தடுப்பாட்டத்தை துளைத்து பலோகனுக்கு துல்லியமாக பாஸை வழங்கினார். பந்தை பெற்ற பலோகன், தன்னைத் தடுக்க ஆக்ரோஷமாகப் பாய்ந்து தடுக்க முயன்ற பாராகுவே வீரர் அல்டெரெட்டேயை சமாளித்து மின்னல் வேகத்தில் கோல் வலையின் மேல் கார்னரை நோக்கி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் அமெரிக்க அணி 3-0 என வலுவான முன்னிலையை பெற்றது.
73-வது நிமிடத்தில் பராகுவே அணி தனது முதல் கோலை அடித்தது. கோல்கீப்பர் கில் நீண்ட தூர ஃப்ரீ-கிக் மூலம் மைதானத்தின் மறுமுனைக்கு லாங் பாஸ் செய்தார். அமெரிக்க டிஃபென்ஸ் அதைச் சரியாகக் கையாளத் தவறியதால், பந்தைக் கட்டுக்குள் கொண்டு பராகுவே அணியின் அல்மிரான், அங்கிருந்து என்சிசோவிற்கு பாஸ் செய்தார். பதற்றமில்லாமல் செயல்பட்ட என்சிசோ, இடதுபுறத்தில் தனியாக விடப்பட்டிருந்த மாரிசியோவுக்கு பந்தை தட்டிவிட அவர், அதை கோலாக மாற்றினார்.
காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+8-வது நிமிடத்தில் அமெரிக்கா 4-வது கோலை அடித்து மிரட்டியது. ஃப்ரீமேன், வெயா ஆகியோரது உதவியுடன் பந்தை பெற்ற ஜியோவானி ரெய்னா துல்லியமாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. முடிவில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
யார் இந்த பலோகன்?
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்காவின் ஃபோலரின் பலோகன் 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் 1930-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே போட்டியில் பல கோல்களை அடித்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை பலோகன் படைத்துள்ளார். 24 வயதாகும் முன்கள வீரரான பலோகன் அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து, லண்டனில் வளர்ந்தவர். இங்கிலாந்து கால்பந்து அணியின் கட்டமைப்பில் இருந்த பலோகன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க அணியில் இணைந்திருந்தார். அமெரிக்க அணியில் வரலாற்று ரீதியாகவே ஸ்டிரைக்கர்கள் குறைபாடு இருக்கும். இதை தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே பலோகன் சரியாக பயன்படுத்திக் கொண்டு அசத்தியுள்ளார்.
முதன்முறையாக 4 கோல்
2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையின் போது நான்கு போட்டிகளிலும் சேர்த்து, அமெரிக்க அணி வெறும் மூன்று கோல்களை மட்டுமே அடித்திருந்தது. மேலும் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அந்த அணி இதற்கு முன்பு மூன்று கோல்களுக்கு மேல் அடித்ததே இல்லை. முதன்முறையாக தற்போது ஓரு ஆட்டத்தில் 4 கோல்களை அடித்து அசத்தியுள்ளது அமெரிக்க அணி.