விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் விளை​யாட முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்கா​வும், 5-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா​வும் தகுதி பெற்​றுள்​ளனர்.

ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்​கா, 12-ம் நிலை வீராங்க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்டோலினாவுடன் மோதி​னார்.

          

ஒரு மணி நேரம் 16 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிச் சுற்றில் அரினா சபலென்கா தொடர்ச்​சி​யாக 4-வது முறை​யாக கால்பதித்துள்​ளார். கடந்த 2023 மற்​றும் 2024-ம் ஆண்டு தொடரில் அவர், சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார்.

அதேவேளை​யில் கடந்த 2025-ம் ஆண்டு இறு​திப் போட்டியில் தோல்வி அடைந்து 2-வது இடம் பெற்றிருந்தார். ஒட்​டுமொத்​த​மாக அரினா சபலென்கா விளை​யாடும் 8-வது கிராண்ட் ஸ்லாம் இறு​திப் போட்டியாக இந்த ஆண்டு ஆஸ்​திரேலிய ஓபன் அமைந்துள்​ளது.

இம்​முறை இறு​திப் போட்​டி​யில் அரினா சபலென்​கா, 5-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். ரைபகினா அரை இறுதி சுற்​றில் 6-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா​வுடன் மோதி​னார். ஒரு மணி நேரம் 40 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் எலெனா ரைபகினா 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டி​யில் நுழைந்​தார்.

சர்​வ​தேச டென்​னிஸ் அரங்​கில் சபலென்கா​வும், ரைபகினா​வும் இது​வரை 14 முறை நேருக்கு நேர் மோதி உள்​ளனர். இதில் சபலென்கா 8 முறை​யும், ரைபகினா 6 முறை​யும் வெற்றி பெற்​றுள்​ளனர். இதில் 2023-ம் ஆண்டு நடை​பெற்ற ஆஸ்​திரேலிய ஓபன் இறு​திப் போட்​டி​யும் அடங்​கும். அந்த ஆட்​டத்​தில் சபலென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் போராடி வெற்றி பெற்று பட்​டம் வென்றிருந்​தார். இந்த தோல்விக்கு இம்​முறை ரைபகினா பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

ரைபகினா கடைசி​யாக விளை​யாடிய 20 போட்​டிகளில் 19-ல் வெற்றி கண்​டுள்​ளார். இதில் கடந்த ஆண்டு நவம்​பரில் ரியாத்​தில் நடை​பெற்ற டபிள்​யூடிஏ பைனல்​ஸ் தொடரில் அரினா சபலென்​காவை வீழ்த்​தி​யதும்​ அடங்​கும்​.

SCROLL FOR NEXT