கம்மின்ஸ்
மெக்காய் நகரில் வங்கதேச அணி உடன் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. தொடரை வெல்லும் வாய்ப்பு பறிபோய்விட்டதால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை மட்டுமே ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. இதில் தொடக்க வீரர் வெதரால்ட் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.
அதே போல் நேதன் லயனைத் தூக்கி விட்டு வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டைக் கொண்டு வரலாமா என்று யோசித்தனர், ஆனால் கடைசியில் எப்படியோ லயன் தப்பி விட்டார், ஆடும் லெவனில் இருக்கிறார்.
கம்மின்ஸ் கூறுகையில், வெதரால்ட் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. மேலும், அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என்பதையும் கம்மின்ஸ் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தினார்.
“வெதரால்டை பொறுத்தவரை இது மிகவும் கடினமான முடிவு. அணியுடன் இருந்தபோது அவர் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் செயல்படும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஆறு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், அவரோ அல்லது நாங்களோ விரும்பிய அளவுக்கு அவர் ரன்களைச் சேர்க்கவில்லை.
மற்றவர்களைப் போலவே அவரும் மீண்டும் சென்று கடுமையாக உழைத்து, அணிக்கான கதவை மீண்டும் தட்ட வேண்டும். முழுமையான ஷெஃபீல்ட் ஷீல்ட் சீசனில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அந்தத் தொடரில் மற்ற அனைவரையும் விட நீங்கள் சிறந்தவர் என்பதைச் சென்று நிரூபியுங்கள்.
ரென்ஷாவைப் பொறுத்தவரை, அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான வெள்ளைப் பந்து போட்டிகளில் ஆஃப்-சீசனில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் சிறப்பாக அமைந்தன. எனவே அவர் நல்ல ஃபார்மில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த சீசனிலும் அவர் ஷீல்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார்.
ஒரு பேட்ஸ்மேன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதிக்கு வரும்போது, தனது சிறந்த ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். ரென்ஷாவைப் பொறுத்தவரை இப்போது அது இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, புத்துணர்ச்சியுடனும் துல்லியத்துடனும் இருந்து, பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே ரென்ஷாவிடம் எங்களின் எதிர்பார்ப்பு.
டார்வினில் வங்கதேசம் கடைப்பிடித்த நிதானமான ஆட்ட அணுகுமுறை குறித்து கேட்கப்பட்டபோது, கடந்த கோடைக்காலத்தில் இங்கிலாந்து விளையாடியதைப் போல வேகமாகவும் அதிரடியாகவும் ஆட்டத்தை நகர்த்த மறுக்கும் அணிகளுக்கு எதிராக நீண்ட நேரம் பொறுமையுடன் விளையாடும் திறன் ஆஸ்திரேலிய அணிக்கும் இருக்க வேண்டும் என்று கம்மின்ஸ் ஒப்புக்கொண்டார்.
“கடந்த வாரம் அவர்கள் எங்களைவிட சிறப்பாக அதைச் செய்தார்கள் என்று நினைக்கிறேன். மிகவும் கட்டுப்பாட்டுடன் விளையாடி, நீண்ட நேரம் ஆட்டத்தை எடுத்துச் சென்றார்கள். உண்மையில், இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நான் விளையாடிய பல டெஸ்ட் போட்டிகளைப் போலவே இருந்ததாக உணர்ந்தேன்” இவ்வாறு கூறினார் கம்மின்ஸ்.