வித்யா ராம்ராஜ்
ஜப்பானில் முடிவடைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலக்கை 54.75 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் 42 வருட தேசிய சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்து இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார்.
தனது சாதனைகளால் வரும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் முதன்முறையாக அறிமுகமாக உள்ளார். இந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 48 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த வகையில் வித்யா ராம்ராஜ் தற்போது 35-வது இடத்தில் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கும் நமது மாநிலத்துக்கும் பெருமை சேர்த்து வரும் 28 வயதான வித்யா ராம்ராஜுடன் நடத்திய உரையாடலில் இருந்து….
2023-ம் ஆண்டு வென்றுள்ள ஆசிய விளையாட்டு பதக்கத்துக்கும், 2026-ம் ஆண்டு வென்றுள்ள ஆசிய விளையாட்டு பதக்கத்துக்கும் என்ன வித்தியாசம்?
கடந்த 2023-ம் ஆண்டும் நான் 3 பதக்கங்களை வென்றிருந்தேன். ஆனால் இப்போது வென்ற 3 பதக்கங்களை மட்டும் இந்த அளவுக்கு ஏன்? கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல உத்வேகம் அளித்த தருணம் எது?
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் நாங்கள் மைதானத்துக்கு உள்ளே நுழையும் போது அனுபவம் வாய்ந்த 36 வயதான பூவம்மா எனக்கு உத்வேகம் அளித்தார். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, தடகளத்தில் நாம்தான் நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்று கொடுக்க வேண்டும்.
பதக்க மேடையில் நமது தேசிய கீதத்தை கேட்டுவிட்டுதான் நாம் வெளியே செல்ல வேண்டும். நாங்கள் 3 பேரும் விரைவாக முடிந்தவரை முயற்சி செய்து முன்னிலை பெற்றுக் கொடுக்கிறோம். அதை பயன்படுத்தி உன்னால் முன்னேறி சென்று பதக்கம் வென்று கொடுக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். உன்னால் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என நம்பிக்கை கொடுத்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான பயிற்சி எப்போது, எங்கு தொடங்குனீர்கள்?
கடந்த நவம்பர் மாதம் முதல் பயிற்சியை தொடங்கினோம். தொடர்ந்து இந்திய தடகள சங்கம் சார்பில் இந்த முறை 3 மாதம் போலந்தில் பயிற்சி எடுத்தோம். அதன் பின்னர் ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் ஜப்பான் சென்று அங்கும் பயிற்சிகளை மேற்கொண்டோம்.
ஜப்பான் ஆசிய விளையாட்டில் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டதே, இந்த விஷயங்கள் ஏதேனும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதா?
நிச்சயமாக இல்லை, ஏனெனில் நான் ஷூக்கள் இல்லாமல் கூட வெறும் கால்களில் ஓடி உள்ளேன். 25 பேர் தங்கியிருந்த அறையில் தங்கியபடி பயறிற்சிகள் எடுத்துள்ளேன். நானே சமையல் செய்து சாப்பிட்டு உள்ளேன். வாடகை அறையில் தங்கியிருக்கிறேன். போட்டிகளுக்காக ரயிலில் பயணம் செய்யும் போது கழிவறை அருகே உள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணித்துள்ளேன்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செல்கிறோம். நமது இலக்கு போட்டியில் பங்கேற்பதும் வெற்றி பெறுவதும் மட்டுமே. தங்குவதற்கு இடமும், உணவும் கிடைத்தால் போதும், மற்றவை குறித்து கவலைப்படக்கூடாது என எனது பயிற்சியாளர் கூறுவார். அதை கடைப்பிடிக்கிறேன். பதக்கத்துக்காக ஓடக்கூடாது, சாதனைக்காக ஓடக்கூடாது. நேரத்துக்காக ஓட வேண்டும் எனவும் அவர், கூறியுள்ளார். இதை மேம்படுத்துவதிலேயே கடந்த 3 வருடங்களாக பணியாற்றினோம்.
இந்த சீசனில் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 56.07 விநாடிகளில் இலக்கை எட்டி இருந்தீர்கள். அங்கிருந்து 1.32 விநாடிகளை எப்படி குறைக்க முடிந்தது?
மாநிலங்களுக்கு இடையிலான போட்டியிலேயே சாதனையை முறியடிக்க முடியும். ஆனால் எனக்கு சவால் அளிக்ககூடிய வீராங்கனைகள் இங்கு இல்லை. கடந்த 5 வருடங்களாக நான் மட்டுமே தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம் வந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் சவால்தரக்கூடிய அளவில் நம்மிடம் வீராங்கனைகள் இல்லை.
கடுமையான போட்டி இருந்தால் தான் திறன் மேம்படும். அப்போதும் நேரத்தை குறைக்க முடியும். ஆசிய போட்டியில் வலுவான போட்டியாளர்கள் இருந்ததால் இம்முறை நேரத்தை குறைக்க முடிந்தது.
2023-ல் பி.டி.உஷா சாதனையை சமன் செய்த நீங்கள் தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளீர்கள், அடுத்த இலக்கு என்ன?
எனது பயிற்சியாளரிடம் இப்போது மகிழ்ச்சியா என கேட்டேன். அதற்கு அவர், இல்லை என்றார். 53 விநாடிகளில் இலக்கை அடைவாய் என எதிர்பார்த்தேன். அதை அடையக்கூடிய திறன் உன்னிடம் இருக்கிறது எனக்கூறினார். இந்த சீசனிலேயே 53 விநாடிகளில் என்னால் இலக்கை அடைந்திருக்க முடியும். ஆனால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது.
அடுத்த சீசனில் அந்த இலக்கை அடைய முயற்சி செய்வோம். அடுத்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. அங்கு ஏற்கெனவே 52 விநாடிகள் சாதனை இருக்கிறது. ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டுமானால் 51 விநாடிகளில் இலக்கை அடைய வேண்டும்.
இதனால் 54 விநாடிகள் என்பது போதாது. வெறும் பதக்கம், சாதனை என்று பார்க்காமல் உலக அளவுக்கு செல்ல வேண்டுமானால் இலக்கை 52 அல்லது 53 விநாடிகளில் எட்ட வேண்டும். இதனால் அதற்கு தகுந்தபடி அடுத்த சீசனில் தயாராவோம்.
உலக சாம்பியன்ஷிப்பில் அறிமுகமாக உள்ளீர்கள், அதற்கான திட்டம் என்ன?
வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடும் போதுதான் குறைந்த நேரத்தை அடைய முடியும். ஏனெனில் அங்குதான் சவால்தரக்கூடிய வீராங்கனைகள் இருப்பார்கள்.
நமது நாட்டில் பயிற்சி பெறுவதற்கும், வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?
போலந்தில் 3 மாதங்கள் பயிற்சி எடுத்தேன். அங்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. உணவில் எந்தவித மசாலாக்களும் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் ஆவியில் வேகவைத்த உணவுகளே கொடுக்கிறார்கள். மேலும் அங்கு நிலவும் வானிலை அற்புதமானது. நம்நாட்டில் வெளியிலுக்காக பயந்து அதிகாலை 5 மணிக்கே பயிற்சிக்கு கிளம்பிவிடுவோம்.
ஆனால் போலந்து போன்ற நாடுகளில் 10 மணிக்கு மைதானத்துக்கு சென்றால் போதும். அங்கு பயிற்சி எடுத்த 3 மாதங்களும் நான் தினமும் 10 மணி நேரம் தூங்கினேன். இதுதான் எனது சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. நல்ல உறக்கம் இருந்தால் அது மனதையும், மூளை திறனையும் சிறப்பாக வைத்திருக்கும். மைதானத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் இது 90 சதவீத பங்கு வகிக்கும்.
மற்ற நாட்டு வீராங்கனைகளுடன் ஒப்பிடும் போது உடற்தகுதி, திறனை எப்படி முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
இதில் முன்னேற்றம் அடைவதற்கு ஒன்றும் இல்லை. எனது பயிற்சியாளர் நான் இலக்கை 54 விநாடிகளில் கடப்பார் என கூறியபோது யாரும் நம்பவில்லை. ஏனெனில் 42 வருடங்களாக பி.டி.உஷாவின் சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது. மேலும் கடந்த 3 வருடங்களாக நானும் 56 விநாடிகளுக்கு கீழே இலக்கை எட்டவில்லை. இதனால் என்னால் எப்படி 54 விநாடிகளுக்குள் ஓட முடியும் என அனைவரும் சந்தேகப்பட்டனர். எப்போதும் தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடியும் என முதலில் நாம் நம்ப வேண்டும். இது அங்கு பலரிடம் இல்லை.
வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே எப்படி?
கடந்த முறை நான் பதக்கம் வென்று திரும்பியபோது வரவேற்க ஆட்களே கிடையாது. ஆனால் இப்போது என்னை பார்க்க என் வீட்டு முன்பு ஏராளமானோர் காத்திருந்தனர். 3 வருடங்களாக இன்ஸ்டாகிராம் நான் பயன்படுத்தவில்லை. ஆனால் கடந்த 3 நாட்களாக நான் இன்ஸ்டாகிராமை விட்டு நகர முடியவில்லை.
என்னை நட்சத்திரங்கள் போல் கொண்டாடுகின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு மாதம் இதை அனுபவித்துக்கொள், அடுத்த மாதம் பயிற்சிக்கு திரும்பிவிட வேண்டும் என எனது பயிற்சியாளர் கூறியுள்ளார். இதனால் இந்த இந்த மாதம் இப்படியே நகர்ந்துவிடும். இவ்வாறு வித்யா ராம்ராஜ் கூறினார்.