நகோயா: 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று மகளிருக்கான பாட்மிண்டன் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன், மானஷி ஜோடி ஜோடி 21-16, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் யாங் கியூஷியா, சியாவோ சூஷியான் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிர் ஒற்றையர் எஸ்யு5 இறுதிப் போட்டியில் துளசிமதி முருகேசன் 18-21, 11-21 என்ற செட் கணக்கில் சீனாவின் யாங் கியூஷியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதேபோன்று கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவு இறுதிப் போட்டியில் துளசிமதி முருகேசன், நிதேஷ் குமார் ஜோடி 21-11, 19-21, 14-21 என்ற செட் கணக்கில் போராடி இந்தோனேஷியாவின் லீனி ரத்ரி, ஹிக்மத் ராம்தானி ஜோடியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள 24 வயதான துளசிமதி முருகேசன், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் எஸ்எல் 4 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நவீன் சிவகுமார் 21-9, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஃப்ரெடி சத்தியாவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். நவீன் சிவகுமார், சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர்.
மகளிருக்கான ஒற்றையர் எஸ்ஹெச் 6 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நித்ய சுமதி சிவன் 12-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லி ஃபெங்மெயிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நித்ய ஸ்ரீ சுமதி, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் நகரைச் சேர்ந்தவர்.
ரூ.2.80 கோடி பரிசு: தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ,‘ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் நவீன் சிவகுமார், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் என மூன்று பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ, டேபிள் டென் னிஸ் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான்டொரப் மதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மகத்தான சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சமும், வீராங்கனை துளசிமதி முரு கேசனுக்கு ரூ.1.75 கோடியும், நித்ய-க்கு ரூ.50 லட்சமும், வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.