ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் கமல்ஜீத், சுருச்சி சிங் ஜோடி.
நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், கமல்ஜீத் ஜோடி 484.6 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா கைப்பற்றும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
தென் கொரியாவின் கேயூன் சூ, சுஹியோன் ஹாங் ஜோடி 478 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஈரானின் ரோஸ்டாமி யன் ஹனியே, கோல்கந்தன் வஹித் ஜோடி 415.8 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றன.
வெள்ளி பதக்கம்
ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க் ஷ் பாட்டீல், நீரஜ் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,762 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனா 1,766 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், கொரியா 1,751 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றன.
50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் தனிநபர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 589 புள்ளிகளுடன் 3-வது இடமும், நீரஜ் குமார் 588 புள்ளிகளுடன் 4-வது இடமும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ஆனால் இறுதிப் போட்டியில் இவர்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர். ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 327.6 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். நீரஜ் குமார் 299 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் யுகுன் லியு 360.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீரரான சாங்ஹாங் ஜாங் 360.2 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கஜகஸ்தானின் சத்பயேவ் இஸ்லாம் (348.3) வெண்கலப் பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸில் கலப்பு இரட்டையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தியா சித்தலே, மனுஷ் ஷா ஜோடி, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஹாங் காங்கின் டூ ஹோய் கெம், வோங் சுன் டிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் தியா சித்தலே, மனுஷ் ஷா ஜோடி 11-6 13-15 11-9 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரை இறுதியில் தியா சித்தலே, மனுஷ் ஷா 8-11, 5-11, 8-11, 2-11 என்ற செட் கணக்கில் சீனாவின் சன் யிங் சில்லி, வாங் சுகின் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் (மணிகா பத்ரா, சரத் கமல் ஜோடி) வென்றிருந்தது. அதன் பின்னர் 8 வருடங்களுக்கு பிறகு தற்போது தியா சித்தலே, மனுஷ் ஷா ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது.
சாட்விக்-ஷிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி
ஆசிய விளையாட்டு பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் 21-12, 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பக்கபொன் தீரரட்சகுல், பீரட்சை சுக்புன் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்குவாஷில் 3 பதக்கங்கள் உறுதி
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷில் நேற்று கால் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் 11-2, 11-5, 11-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த தன்வி கன்னாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் அனஹத் சிங், ஜப்பானின் சடோமி வத்தனாபேவுடன் மோதுகிறார்.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங் 11-4, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரியோனோசுக்கே சுகுவேவை வீழ்த்தினார். அரை இறுதியில் அபய் சிங், பாகிஸ்தானின் இர்ஃபான் முகமதுவுடன் மோதுகிறார். இர்ஃபான் முகமது கால் இறுதி சுற்றில் 6-11, 11-8, 11-3, 11-3 என்ற செட் கணக்கில் இந்தியாவின் வீர் சோட்ரானியை வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடி 11-3, 11-5 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸின் டேவிட் பெலினோ, ஜெமிகா அரிபடோ ஜோடியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் அரை இறுதியில் இந்திய ஜோடி, ஹாங்காங்கின் யோ கா லீ, மிங் ஹாங் டாங் ஜோடியை எதிர்கொள்கிறது. ஜோஷ்னா சின்னப்பாவும், வேலவன் செந்தில் குமாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அரை இறுதியில் கால்பதித்துள்ளதன் மூலம் அனஹத் சிங், அபய் சிங் ஆகியோருடன் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில் குமார் ஜோடியும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 6-வது முறையாக பதக்கம் வெல்ல உள்ளார்.
40 வயதான ஜோஷ்னா சின்னப்பா, 2018-ம் ஆண்டு போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 2010 மற்றும் 2022-ம் ஆண்டில் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார்.
போல் வால்ட்டில் வெண்கலம் வென்று பரணிகா சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று மகளிக்கான போல் வால்ட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பானின் மிசாகி மொரோட்டா 4.55 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், சீனாவின் சுங்கே நியு 4.50 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் பரணிகா இளங்கோவனும், கஜகஸ்தானின் போலினா இவனோவாவும் தலா 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றனர். இருவருமே 4.25 மீட்டர் உயரத்தை தாண்டத் தவறினர். ஆசிய விளையாட்டில் போல் வால்ட்டில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். 29 வயதான பரணிகா இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மகளிர் ஹாக்கியில் 4-வது வெற்றி
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி தரப்பில் லால்ரெம்சியாமி (5-வது நிமிடம்), இஷிகா சவுத்ரி (30-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு இது தொடர்ச்சியான 4-வது வெற்றியாக அமைந்தது. இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 17-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவையும், 3-வது ஆட்டத்தில் 20-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தையும் தோற்கடித்து இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதிப்படுத்திக் கொண்டது இந்திய மகளிர் அணி.
கால் இறுதியில் சச்சின் சிவாச்
ஆடவருக்கான குத்துச்சண்டையில் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சச்சின் சிவாச் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோர்டானின் முகமது அட்னான் அபுவுடன் மோதினார். இதில் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ப்ரீத் பவார் 0-5 என்ற கணக்கில் வட கொரியாவின் பாங் சோலிடம் தோல்வி அடைந்தார்.
கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணிகள்
ஆசிய விளையாட்டு கபடி அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி 66-28 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 48-24 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு பிரிவிலும் இந்திய அணிகள் ஈரானை எதிர்கொள்கின்றன.
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பந்தய தூரத்தை 28:29.38 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹாங்சோவில் கடந்த 2022-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் அவர், வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். பக்ரைனின் பிர்ஹானு பாலேவ் பந்தய தூரத்தை 28:27.51 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அதே நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் கிப்டோ (28:34.18) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் மன்பிரீத் கவுர்
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் 17.17 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் சாங் ஜியுவான் (19.40), ஜாங் லின்ரு (18.14) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனையான கிருஷ்ணான ஜெயசங்கர் மேனன் (16.57) 5-வது இடம் பிடித்தார். இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 12-வது இடம்
ஆசிய விளையாட்டு போட்டியில் 7-வது நாளான நேற்றைய முடிவில் பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம். 9 வெள்ளி, 12 வெண்கலத்துடன் 23 பதக்கங்கள் பெற்று 15-வது இடத்தில் இருந்து 12-வது இடத்துக்கு முன்னேறியது.
சீனா 98 தங்கம், 37 வெள்ளி, 24 வெண்கலம் என 159 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஜப்பான் 28 தங்கம், 43 வெள்ளி, 44 வெண்கலம் என 115 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், தென் கொரியா 13 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.