நகோயா: ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் இந்தியா ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தின.
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஈரானுடன் மோதியது. இதில் இந்திய அணி 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்வைத்துக் கொண்டது.
ஈரான் மகளிர் அணி வலது பக்கத்தில் பலவீனமாக இருந்தது. இதை சாதகமாக மாற்றிக் கொண்ட இந்திய அணியின் ரெய்டர்களான நிகிதா, கேப்டன் பூஜா, சஞ்சு தேவி தொடர்ச்சியாக அந்த பகுதியில் தாக்குதல் தொடுத்து புள்ளிகளை குவித்தனர்.
தொடக்கத்தில் இந்திய மகளிர் அணி 3-1 என முன்னிலை வகித்தது. ஈரான் அணியில் 3 வீராங்கனைகள் மட்டுமே இருந்த நிலையில் கடுமையாக போராடி ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலையை எட்டினர். முதல் பாதி ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் ஈரான் அணி ஆல் அவுட் ஆனது. ரெய்டு, டிஃபன்ஸில் ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி முதல் பாதி முடிவில் 22-16 என முன்னிலை வகித்தது.
2-வது பாதி ஆட்டத்தில் ஈரானின் ரெய்டர்களான அத்தேனா மடாடி, ஐனாஸ் ஃபராமார்ஜி ஆகியோர் இந்திய அணியின் டிஃபன்ஸை தொடர்ந்து சோதித்தனர். டிஃபன்ஸையும் அந்த அணி வலுப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் இந்திய அணி ஆல் அவுட் ஆக ஈரான் அணி 27-28 என நெருங்கியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இந்திய வீராங்கனைகள் பதற்றம் அடையால் தங்களது அனுபவத்தால் அழுத்தத்தை சரியாக கையாண்டனர். பதற்றமடைவதற்குப் பதிலாக, தங்கள் டிஃபன்ஸை வலுப்படுத்தினர். மிகவும் கவனமாக செயல்பட்டு ஈரான் அணி அதிக ரிஸ்க் எடுக்கக் கட்டாயப்படுத்தினர்.
இந்த உத்தி பலன் கொடுத்தது. போட்டி முடிவடைய ஒரு நிமிடம் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 37-31 என முன்னிலை பெற்றது. ஈரான் தனது இறுதி ரெய்டுகளில் முழு பலத்தையும் பிரயோகித்தது. எனினும் அந்த அணியால் 34-37 என்று நெருங்கிவர மட்டுமே முடிந்தது. இந்திய மகளிர் அணி, ஈரான் வீராங்கனைகளை அவுட் செய்ததன் வாயிலாக 26 புள்ளிகளையும், போனஸாக 8 புள்ளிகளையும், ஆல் அவுட் செய்ததன் வாயிலாக 2 புள்ளிகளையும், சூப்பர் டேக்கிள் வாயிலாக ஒரு புள்ளியையும் என ஒட்டுமொத்தமாக 37 புள்ளிகளை குவித்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும். கடந்த 2010-ம் ஆண்டு குவாங்சூ ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கபடி முதன்முறையாக அறிமுகமாகி இருந்தது. அந்தத் தொடரில் இருந்து தொடர்ச்சியாக 2 முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி 2018-ம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டில் ஈரானிடம் தங்கப் பதக்கத்தை இழந்திருந்தது. எனினும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி மீண்டும் தங்கப் பதக்கம் கைப்பற்றியது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஆடவர் அணி
ஆடவருக்கான கபடி இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஈரான் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. ஆட்டத்தின் பாதியில் இந்திய அணி தடுமாறியது. எனினும் ரெய்டர்களான அர்ஜுன் தேஸ்வால், தேவாங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினர். ஈரான் அணி ஒவ்வொரு புள்ளியையும் தனது கடைசிப் புள்ளி போல போராடிப் பெற்றது. இதனால் இந்திய அணி எளிதில் நிலைத்தன்மைக்கு வர அனுமதிக்கவில்லை.
முதல் பாதி முடிவில், ஈரான் 18-17 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஈரான் அணியின் தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் இந்திய அணி பதற்றமடையவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் ஆட்டத்தின் வேகத்தை மாற்றினார்கள். தங்கள் ரெய்டர்களை நம்பினார்கள் மற்றும் அனுபவத்தைத் தங்களின் பலமாக மாற்றினர். அர்ஜுனும் தேவாங்கும் ஈரானின் பகுதிக்குள் ரெய்டு சென்று முக்கியமான புள்ளிகளுடன் திரும்பினர். இது படிப்படியாக ஈரானைப் பின்வாங்கச் செய்தது.
மேலும் இந்தியா தனது தற்காப்பு அரண்களையும் இறுக்கியது, இதனால் ஈரான் ரெய்டர்கள் புள்ளிகளைப் பெறுவது கடினமாகியது. இந்தியா ஒரு ஆல்-அவுட்டைச் செய்து தனது முன்னிலையை 29-24 ஆக உயர்த்தியபோது ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அங்கிருந்து இந்தியர்கள் தங்கள் அனுபவத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டினர். அவசரமாகப் புள்ளிகளை குவிப்பதற்கு பதிலாக ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்தனர். ரெய்டர்கள் அதிகப்படியான ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாகத் திரும்பினர். இது ஈரானை ரிஸ்க் எடுக்கக் கட்டாயப்படுத்தியது.
புள்ளிகள் தேவைப்பட்டதால், ஈரான் ரெய்டர்கள் இந்தியாவின் பகுதிக்குள் ஆழமாக ஊடுருவத் தொடங்கினர். ஆனால் அவர்களால் தற்காப்பு அரணின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போனது.
இந்திய ஆடவர் அணி, ஈரான் வீரர்களை அவுட் செய்ததன் வாயிலாக 30 புள்ளிகளையும், போனஸாக 4 புள்ளிகளையும், ஆல் அவுட் செய்ததன் வாயிலாக 2 புள்ளிகளையும், சூப்பர் டேக்கிள் வாயிலாக 3 புள்ளிகளையும், டெக்னிக்கலாக ஒரு புள்ளியையும் பெற்றது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வெல்வது இது 9-வது முறையாகும். கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் மட்டுமே இந்திய அணி பதக்க வாய்ப்பை தவறவிட்டு இருந்தது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரை இறுதியில் நேற்று இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில் குமார் ஜோடி, ஹாங் காங்கின் டாங் மிங்-ஹாங், லீ கா யி ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடி 10-11, 11-2, 10-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. அரை இறுதியில் தோல்வி அடைந்த ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது. இவர்கள் இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 40 வயதாகும் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு இது 6-வது ஆசிய விளையாட்டுப் பதக்கமாகும். அவர், ஏற்கெனவே ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஸ்குவாஷில் ஒலிம்பிக் தகுதியை நெருங்கும் அனஹத், அபய் சிங்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ஸ்குவாஷ் அரை இறுதி சுற்றில் இந்தியாவின் அபய் சிங், பாகிஸ்தானின் முகமது இஃர்பானை எதிர்த்து விளையாடினார். இதில் அபய் சிங் 11-3, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் அரை இறுதிப் போட்டியில் 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சட்டோமி வத்தனாபேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அபய் சிங்கும், அனஹத் சிங்கும் வெற்றி பெறும் பட்சத்தில் தங்கப் பதக்கம் வெல்வதுடன் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள்.
ஆடவர் குண்டு எறிதலில் தஜிந்தர்பாலுக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான குண்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் டூர் 20.64 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் அவர், பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். தஜிந்தர்பால் சிங் கடந்த 2018 மற்றும் 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். ஈரானின் முகம்மத்ரேசா தாய்பிசே (20.81) தங்கப் பதக்கமும், சவுதி அரேபியாவின் முகமது தொலு (20.48) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மாரத்தானில் வெள்ளி வென்று சவான் பர்வால் சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான மாரத்தானில் (42.195 கிலோ மீட்டர்) இந்தியாவின் சவான் பர்வால் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 11 நிமிடங்கள் 37 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 28 வயதான சவான் பர்வால் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். ஜப்பானின் இச்சிதாகா யமாஷிதா (2:10:49) தங்கப் பதக்கமும், சீனாவின் பெய்யூ ஃபெங் (2:12:13) வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஆசிய விளையாட்டு மாரத்தானில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதன்முறை.
இதற்கு முன்னர் கடைசியாக 44 வருடங்களுக்கு முன்னர் 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ஒசூர் குக்கப்பா சீத்தாராம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆசிய விளையாட்டு மாரத்தானில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் சவான் பர்வால் பெற்றுள்ளார்.
டெல்லியில் கடந்த 1951-ம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்களான சோட்டா சிங் மற்றும் சூரத் சிங் மாத்தூர் முறையே தங்கமும் வெண்கலமும் வென்றிருந்தனர்.
400 மீட்டர் ஓட்டத்தில் பிராச்சிக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிராச்சி சவுத்ரி பந்தய தூரத்தை 53.21 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பக்ரைனின் சல்வா நாசர், இலக்கை 49.20 விநாடிகளில் எட்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், ஈரானின் ஜஹ்ரா ஜரேய் மனோஜன் (52.38) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
துப்பாக்கி சுடுதலில் இந்திய அணிக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசனில் திலோத்தமா சென், விதர்சா வினோத், ’ ஆஷி சவுக்ஸி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1,763 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
சீனா 1,773 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், கஜகஸ்தான் 1,754 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றன. 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசனில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் திலோத்தமா சென் 337.3 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். விதர்சா வினோத் 327.4 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார்.
சீனாவின் ஜியாயு ஹான் 359 புள்ளிகள் குவித்து என்ற ஆசிய விளையாட்டு சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவைச் சேர்ந்த லியுவான் ஜாங் (358.8) வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் ஜியூன் கிம் (348.4) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.