குல்வீர் சிங் ‘ஹாட்ரிக்’
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பந்தய தூரத்தை 13:32.75 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் குல்வீர் சிங் வெல்லும் 3-வது பதக்கம் இதுவாகும்.
அவர், 1500 மீட்டர் ஓட்டத்திலும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளி பதக்கங்களை அவர் வென்றிருந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் ஒரே தொடரில் தடகளத்தில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் குல்வீர் சிங்.
இதற்கு முன்னர் 1951-ல் நடைபெற்ற நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய வீரர் லவி பின்டோ 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். அதேவேளையில் மகளிர் பிரிவில் 1986-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பி.டி.உஷா 4 தங்கம், ஒரு வெள்ளி வென்று அசத்தியிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக 2002-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் கே.எம்.பீனாமோள் 3 பதக்கம் வென்றிருந்தார்.
ராணுவ வீரர்களுக்கு பதக்கம் சமர்ப்பிப்பு
ஆசிய விளையாடு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவில் இந்திய வீராங்கனையான நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தப் பதக்கத்தை எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். எல்லைப்பகுதியில் அவர்கள் செய்யும் தியாகத்தோடு ஒப்பிடும்போது எனது சாதனை ஒன்றுமே இல்லை.
மேலும், 1978-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டிராப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரரான ரந்தீர் சிங்குக்கும் இந்தத்தங்கப் பதக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவர் மிகவும் அன்பான மனிதர். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அரவணைத்து, அறிவுரை வழங்குவார். நிச்சயமாக, ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதுதான். இந்தப் பதக்கங்கள் அந்த இறுதி இலக்கை அடைவதற்கான படிக்கற்கள் மட்டுமே” என்றார்.
‘10 நாட்களுக்கு முன் மருத்துவமனையில்’
ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு நீரு தண்டா கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். ஹெச்1என்1 காய்ச்சலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், ஐந்து நாட்களாக எதையும் உண்ண முடியாமல் அவதிப்பட்டார். இதனால் ஆசிய போட்டியில் நீரு தண்டா பங்கேற்பதும், அவரது திறனும் பெருமளவு கேள்விக்குறியாகவே இருந்தன.
இருப்பினும், அவரது தனிப்பட்ட பயிற்சியாளரும், முன்னாள் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரருமான மன்ஷர் சிங், உடல்நலக் குறைவை மறந்துவிட்டு முழுமூச்சுடன் போராடுமாறு நீரு தண்டாவை ஊக்குவித்தார். இதனால் உந்துதல் பெற்ற நீரு தண்டா விரைவாக குணம் அடைந்து ஜப்பானுக்கு புறப்பட்ட நிலையில் தற்போது தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
உயரம் தாண்டுதலில் பூஜாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா சிங் 1.84 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் பர்நோகோன் சைஃபுல்லாயேவா (1.90) தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் கிறிஸ்டினா ஓவ்சின்னிகோவா (1.87) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.