ஐ.அருமைநாயகம் (இடது), பேட்மிண்டன் வீராங்கனைகள் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் (இடது) 

 
விளையாட்டு

தமிழக கால்பந்து ஜாம்பவான் ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனை விருது!

17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு; கேல் ரத்னா இம்முறை இல்லை

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: திவ்யா தேஷ்முக், தேஜஸ்வின் சங்கர், தனுஷ் ஸ்ரீகாந்த் உட்பட 17 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இன்று 2025-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது. இதில் 17 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டு 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா' விருதுக்கு எந்த விளையாட்டு வீரரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி நட்சத்திரம் ஹர்திக் சிங் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டாலும், இறுதியில் அந்த விருதுகள் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2014-ம் ஆண்டில்தான் கேல் ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில், அர்ஜுனா விருதுக்காகத் தேர்வுக் குழு முதலில் 24 பேர் கொண்ட பட்டியலை முன்மொழிந்திருந்தது, ஆனால் அமைச்சகம் 17 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது. இருப்பினும், இந்தப் பட்டியலில் ஒரு கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை. 2023-ல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இவ்விருதைப் பெற்றதன் பின்னர், கிரிக்கெட் வீரர் யாருக்கும் இவ்விருது வழங்கப்படவில்லை.

அர்ஜுனா விருதுகள் பெற்றோர் பட்டியல்: தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜராத்தி (சதுரங்கம்), திவ்யா தேஷ்முக் (சதுரங்கம்), தனுஷ் ஸ்ரீகாந்த் (பாரா துப்பாக்கி சுடுதல்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜீத் (கபாடி), ருத்ராம்ஷ் கண்டேல்வால் (பாரா-துப்பாக்கி சுடுதல்), ஏக்தா பயான் (பாரா-தடகளம்), அரவிந்த் சிங் (துடுப்புப் படகுப் போட்டி), அகில் ஷியோரன் (துப்பாக்கி சுடுதல்), ட்ரீசா ஜாலி (பேட்மிண்டன்), காயத்ரி கோபிசந்த் (பேட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அஜ்மல் (தடகளம்), பூஜா (கபடி).

அர்ஜுனா விருது (வாழ்நாள் சாதனை): ஐ.அருமைநாயகம் (கால்பந்து).

துரோணாச்சாரியா விருது: பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா சவான்.

துரோணாச்சாரியா விருது (வாழ்நாள் சாதனை): தர்மேந்திர யாதவ், வீரேந்தர் குமார்.

SCROLL FOR NEXT