சென்னை: ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை துபாயில் நடைபெற்றது.
இதன் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பேபி சஹானா ரவி, நிதிஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றிருந்தனர்.
பேபி சஹானா ரவி 23 வயதுக்குட்பட்ட மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பிலிப்பைன்சை சேர்ந்த மங்கின்சே லெனி மேரியை 6-11, 11-5, 11-8, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். நிதிஷ் 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மயிலாப்பூர் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேபி சஹானா, நிதிஷ் ஆகியோரை பாராட்டினார். பயிற்சியாளர்கள் சீனிவாச ராவ், முரளிதரராவ், மீனாட்சி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.