விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,290 கோடிக்கு வாங்கும் அமெரிக்க முதலீட்டாளர்கள்

ஆர்.முத்துக்குமார்

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, சுமார் 1.635 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.15,290 கோடி) மதிப்பில் அமெரிக்காவை சேர்ந்த உயர்மட்ட முதலீட்டாளர் குழுவால் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த முதலீட்டாளர் குழுவை அரிசோனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன அதிபர் கல் சோமானி தலைமையேற்கிறார். இவருடன், அமெரிக்க தேசிய கால்பந்து லீகின் அணியான டென்வர் பிராங்க்கோஸின் உரிமையாளர் ராப் வால்டன் மற்றும் டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர் ஷெய்லா ஃபோர்ட் ஹாம்ப்பி மகன் மைக்கேல் ஹாம்ப் உள்ளிட்டோர் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்குகின்றனர்.

          

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐபிஎல் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குழுமம் அதாவது SA20 லீக்கில் விளையாடும் Paarl Royals மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் Barbados Royals அணிகளும் இதே குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வரும். மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற இதற்கான பல சுற்று ஏலத்தில் அவ்ராம் கிளேசியர் தலைமையிலான லான்சர் கேப்பிடல், காப்ரி குரூப், ஆதித்ய பிர்லா, குழுமம், டைம்ஸ் குழுமம் ஆகிய போட்டியாளர்களை விஞ்சி ராஜஸ்தான் ராயல்ஸ் குழுமத்தை வாங்கியுள்ளது அமெரிக்க முதலீட்டாளர்கள் குழு.

2008-ம் ஆண்டு மனோஜ் பதாலே தலைமையிலான எமர்ஜிங் மீடியா நிறுவனம் ராஜஸ்தான் ராயல்ஸை வெறும் 67 மில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் குறைந்த மதிப்புள்ள அணியாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் தொடக்க சீசனில் ஷேன் வார்ன் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.

தற்போது சோமானி தலைமையிலான குழு மற்றும் பதாலே இடையே இறுதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம் விரைவில் பிசிசிஐ அனுமதி பெற்று முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உரிமையாளர் மாற்றம் ஐபிஎல் 2026 மீது எந்த தாக்கமும் ஏற்படுத்தாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT