கன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் கனவைத் தகர்த்த அர்ஜெண்டினா, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் இங்கிலாந்தைச் சந்திக்கின்றது.
உலகக் கோப்பை வரலாற்றில் ஃபிபா தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல் முறை.
கூடுதல் நேரத்தின் 112-வது நிமிடத்தில் ஜூலியன் ஆல்வரேஸ் அடித்த அசத்தலான தொலைதூர கோல் அர்ஜெண்டினாவுக்கு ஆட்டம் முடியும் தருவாயில் முன்னிலையைப் பெற்றுத்தர பிறகு மார்ட்டினேஸ் கடைசி 121-வது நிமிடத்தில் 3-வது கோலை அடிக்க அர்ஜெண்டினாவின் முழு ஆதிக்கம் நிறைவு பெற்றது.
இதற்கு முன், லியோனல் மெஸ்ஸி எடுத்த கார்னர் கிக்கை அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோலாக மாற்றி அர்ஜெண்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இந்தப் போட்டியில் மெஸ்ஸியின் தொடர்ச்சியான ஒன்பது உலகக் கோப்பை ஆட்டங்களில் கோல் அடித்த சாதனை முடிவுக்கு வந்தாலும், இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் அவரது கனவு தொடர்ந்து உயிருடன் உள்ளது.
சர்ச்சைக்குரிய சுவிஸ் வீரரின் ‘ரெட் கார்டு’ தீர்ப்பு
ஆட்டத்தின் திருப்புமுனை இரண்டாவது பாதியில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய நடுவர் முடிவாக அமைந்தது. 67-வது நிமிடத்தில் டான் ந்டோயே கோல் அடித்து சுவிட்சர்லாந்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடந்ததுதான் எதிர்பாராதது. சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ மீது அர்ஜெண்டினா வீரர் பராடேஸ் செய்த இடையூறுக்காக பராடேசுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது.
ஆனால், சிலபல சண்டை சச்சரவுகளுக்குப் பிறகு வீடியோ அசிஸ்ட் ரிவியூவில் பாரடேஸின் காலை பின் பக்கமாக தன் காலை நீட்டி அவர் மீது ஃபவுல் குற்றச்சாட்டு வரவேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே எம்போலோ செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 2-வது மஞ்சள் அட்டை, அதாவது சிகப்பு அட்டைக் காட்டப்பட்டது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் மிக மோசமாக அர்ஜெண்டின வீரரைத் தடுத்ததற்காக எம்பாலோ ஏற்கெனவே மஞ்சள் அட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் எம்போலோ வெளியேற்றப்பட்டார்,
அவர் கண்ணீர் மல்க வெளியேறியது பரிதாபமாக இருந்தது. ஆனால் தவறு இவர் பக்கம் உள்ளது ஏனெனில் இப்போது மாற்றப்பட்ட ஃபிபா விதிகளின் படி தவறாகக் கொடுக்கப்பட்ட மஞ்சள் அட்டை, கார்னர் வாய்ப்புகள், கோல்கள், பெனால்டிகள் என்று எதை வேண்டுமானாலும் இப்போது வீடியோ உதவி மூலம் மாற்றியமைக்கலாம்.
உலகக் கோப்பை தொடரில் ‘தவறான வீரருக்கு அட்டை’ (Mistaken Identity) நடைமுறையின் மூலம் மஞ்சள் அட்டை மாற்றப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
1954-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து, தனது வரலாற்றில் இதுவரை அரையிறுதியை எட்டியதில்லை. மேலும், அர்ஜெண்டினாவுக்கு எதிராக விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாத நிலை தொடர்கிறது. அவற்றில் மூன்று தோல்விகள் உலகக் கோப்பையிலேயே நிகழ்ந்ததுதான்.
போட்டியின் பெரும்பகுதியில் அர்ஜெண்டினாவின் பாதுகாப்பை உடைக்க சுவிட்சர்லாந்து சிரமப்பட்டது. தொடரின் அதிக கோல் அடித்த வீரரான யோஹான் மான்சாம்பி முழங்கால் காயம் காரணமாக மீண்டும் விளையாடாததும் அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது.
இரண்டாவது பாதியில் அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் இரண்டு முக்கியமான சேவ்களை செய்தபோதிலும், ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ் அளித்த துல்லியமான பாஸை டான் ந்டோயே அழகாக கோலாக மாற்றி சமநிலையை ஏற்படுத்தினார்.
ஆனால், எம்போலோ வெளியேற்றப்பட்டதும் சுவிட்சர்லாந்து பெற்றிருந்த உத்வேகம் முற்றிலும் குறைந்தது. 89-வது நிமிடத்தில் மெக் அலிஸ்டரின் ஹெடர் இலக்கைத் தவறியது. ஸ்டாப்பேஜ் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் மெஸ்ஸி உருவாக்கிய அருமையான வாய்ப்பும் கோலாக மாறவில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
இறுதியில், இந்த உலகக் கோப்பை முழுவதும் செய்ததைப் போலவே, நெருக்கடியான தருணத்தில் அர்ஜெண்டினா மீண்டும் வழியைக் கண்டது. 112-வது நிமிடத்தில் ஜூலியன் ஆல்வரஸ் தொலைதூரத்தில் இருந்து அடித்த அற்புதமான கோல் அர்ஜெண்டினாவை முன்னிலைக்கு கொண்டு வந்தது.
பின்னர் கடைசி வினாடிகளில் லவுடாரோ மார்டினஸ் மேலும் ஒரு கோல் அடித்து 3-1 என்ற வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை நோக்கி அர்ஜெண்டின அணி ஸ்திரமான நிலையில் உள்ளது.