இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் மற்றும் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் பெத்தெல் மீது, கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நைட்கிளப் பாதுகாப்பு பணியாளருடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து சுயாதீன கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பான ‘கிரிக்கெட் ரெகுலேட்டர்’ இருவருக்கும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெலிங்டனில் உள்ள ஒரு நைட்கிளப்பில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது ஏற்கெனவே மதுபோதையில் இருந்ததால் இங்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் தான் மட்டுமே இருந்ததாகவும் வேறு யாரும் இல்லை என்று மறுத்த புரூக், பிறகு பெத்தெல் இருந்ததை ஒப்புக் கொண்டார்.
பிரச்சனை என்னவெனில் மறுநாளைக்கு சர்வதேசப் போட்டி இருக்கும் போது முதல் நாள் இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதுதான் ஒழுங்கு நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது. இந்த விசாரணையில், இருவரும் தொழில்முறை நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டனர்.
குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின் 3.2 பிரிவின்படி, கிரிக்கெட்டின் நற்பெயருக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் டங்கும் அங்கு இருந்தார்.
எனினும், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ‘எச்சரிக்கை நோட்டீஸ்’ அடுத்த மூன்று ஆண்டுகள் வரை அவர்களின் ஒழுக்கப் பதிவில் இருக்கும். இது இறுதி எச்சரிக்கையாக கருதப்படுவதால், மேலும் தவறுகள் நிகழ்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், Josh Tongue இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடர் தோல்விகளின் போதும் இங்கிலாந்து அணியின் சில வீரர்களின் மதுபோதைப் பழக்கம் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.