விளையாட்டு

வயதைக் குறைத்துக் காட்டி மோசடி: இந்திய வீரருக்கு 2 ஆண்டு தடை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: வயதைக் குறைத்துக் காட்டி மோசடி செய்து அணியில் இடம்பெற்றதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் (19 வயதுக்குட்பட்டோர்) ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டு தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் (19 வயதுக்குட்பட்டோர்) இடம் பெற்று விளையாடி வந்தவர் ரோஹித் யாதவ்.

கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் ரோஹித் யாதவ் இடம்பெற்றிருந்தார். இந்தப் போட்டியின்போது சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை ரோஹித் யாதவ் வீழ்த்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணியிலும் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளராக ரோஹித் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது வயதைக் குறைத்துக் காட்டி மோசடி செய்ததாக சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவ் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ரோஹித் யாதவின் பிறந்த ஆண்டு தொடர்பான பல்வேறு பதிவுகளை கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் (சிஏபி) ஆய்வு செய்தது. அப்போது, அவரது பிறந்த ஆண்டு 2007-ல் இருந்து 2006 ஆகவும், பின்னர் 2009 என்றும் மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வயதைக் குறைத்துக் காட்டி மோசடி செய்து அணியில் இடம்பெற்றதற்காக அவர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் எந்தவிதமான போட்டியிலும் விளையாடத் தடையை பிசிசிஐ நேற்று விதித்துள்ளது.

ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய யு-19 அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT