விளையாட்டு

ஆஸி.க்குப் பிறகு பேரிரைச்சல்... அகமதாபாத் கூட்டத்தை ‘அமைதி’யாக்கிய தென் ஆப்பிரிக்கா!

ஆர்.முத்துக்குமார்

2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோற்ற போது ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ரசிகர்களும் ஏமாற்றத்தில் குரலடைத்து மவுனமாக்கப்பட்டனர். நேற்று டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணி அன்று ஆஸ்திரேலியா செய்ததை மேலும் வலுவாகச் செய்து காட்டியது.

காரணம் திட்டமிடலில் கோளாறு, அணுகுமுறையில் அலட்சியம், அணித்தேர்வில் திமிர் போன்றவற்றால் இந்திய அணி தாறுமாறான தோல்வியைச் சந்தித்தது. நேற்று 80-85 ஆயிரம் ரசிகர்கள் தென் ஆப்பிரிக்கா பவர் ப்ளேயில் 20/3 என்று ஆனவுடன் வீறு கொண்ட குரல்வளையின் ஸ்தாயியை உயர்த்தினர். ஆனால் அதே இந்தியா பேட் செய்த போது அதே பவர் ப்ளேயில் அசாத்திய மவுனத்திற்குள் தள்ளப்பட்டனர்.

          

காரணம் பேட்டிங்கில் நிதானமான, சிந்தித்துச் செயல்படும் தந்திரோபாயம், உத்தி எதுவும் இல்லாமல் எதிரணி பவுலர்களை ஏதோ தெரு கிரிக்கெட் பவுலர்கள் போல் எல்லா பந்தையும் தூக்கி அடித்தால்தான் சரி என்று ஆடி திமிர்த்தனமான பேட்டிங்கில் சரிவு கண்டதே.

ஹர்திக் பாண்டியா 15வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் பெரும் கூட்டம் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். 20/3 என்று தென் ஆப்பிரிக்கா பும்ரா, அர்ஸ்தீப் சிங்கும் அட்டகாசமாக வீசினர், அதிலும் குறிப்பாக பும்ரா நேற்று sublime என்று சொல்வார்களே அத்தகைய கனவு ஸ்பெல்லை வீசினார். ஆனால் 20/3--க்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா மடியத் தயாராக இல்லை.

இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் அதோடு தென் ஆப்பிரிக்காவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நினைத்து வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு வந்தார், ஆனால் டேவிட் மில்லர் வேறு திட்டங்களை அவருக்காகவும் தனக்காகவும் வைத்திருந்ததோடு ஒரு மூத்த வீரராக இளம் புலி டெவால்ட் பிரெவிஸை அருமையாக வழிநடத்தினார். இந்திய அணியில் அத்தகைய வழிநடத்தும் வீரர்கள், அதாவது விராட் கோலி, ரோஹித், ஸ்ரேயஸ் அய்யர் போன்ற வீரர்கள் இல்லை.

வருண் சக்ரவர்த்தி பற்றி தென் ஆப்பிரிக்கா அணி நிர்வாகம் முழு நேர விவாதம் செய்து உத்திகளை வகுத்தனர், இதனை டேவிட் மில்லர் பிற்பாடு சொன்னார். வருண் சக்ரவர்த்தியை அவர்கள் ஆடிய விதம் அவரை வெறும் கூக்ளி பவுலராக நேற்று மாற்றியது.

தென் ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் வலுவானது, அவர்கள் இந்திய மிடில் ஆர்டர் அணுகுமுறையை விட சிறப்பாக ஆடினர். இந்த உலகக்கோப்பைக்கு முன்னால் இந்தியா ஆடிய பிட்ச்கள் கட்டாந்தரை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. கட்டாந்தரை பிட்சும், தார்ச்சாலை பிட்சும் போடுவதற்கு இது ஒருதலைபட்ச வெற்றிக் குறிவைப்பு பிசிசிஐ தொடர் அல்ல, இது ஐசிசி தொடர். பிட்ச்கள் வித்தியாசமாகவே இருக்கும்.

இந்தத் தொடரிலேயே எடுத்துக் கொண்டால் பவர் ப்ளேவுக்குப் பிறகு இந்திய அணி மந்தமடைந்ததைத்தான் பார்த்து வருகிறோம். எப்படியோ யாரோ ஒருவர் அதிரடி இன்னிங்ஸை ஆடி தடுக்கக் கூடிய ரன் எண்ணிக்கையை எட்டச் செய்தனர்.

அமெரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ், நமீபியாவுக்கு எதிராக இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷனின் அசாதாரணத் தொடக்கம், நெதர்லாந்துக்கு எதிராக ஷிவம் துபே என்று தனிப்பட்ட வீரர்களின் பங்களிப்பினால் நல்ல இலக்கை நிர்ணயிக்க முடிந்ததே தவிர மிடில் ஓவர்களுக்கான அணியின் திட்டம் என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட திட்டமின்மை நேற்று அப்பட்டமாகத் தெரிந்தது.

லுங்கி இங்கிடி நேற்று அற்புதமாக ஸ்லோயர் ஒன் பந்துகளை தெரியாதபடிக்கு வீசி இந்திய வீரர்களை குழப்பி விட்டார். இந்திய அணியின் பேட்டிங் சரிவில் லுங்கி இங்கிடியின் பந்து வீச்சு பெரிய பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் மார்க்ரமை வீச வைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாக இருந்தும் இந்திய டாப் ஆர்டர் அவருக்கு எதிராக எந்த வித அர்த்தமுள்ள உத்திகளையும் வகுக்கவில்லை.

இந்திய அணி உதவிப்பயிற்சியாளர் ரியான் டஸ்சாத் கூறும்போது, “தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அருமை. ஸ்லோ பந்துகளில் லுங்கி இங்கிடி உண்மையில் வித்தியாசமாகச் செயல்பட்டார். என்னதான் நாங்கள் திட்டமிட்டாலும் அதையெல்லாம் மீறி லுங்கி இங்கிடி இந்திய பேட்டர்களை தன் கைத் திறமையினால் திணறடித்தார்.

குறிப்பாக ஃபுல் லெந்தில் விழும் அந்த ஸ்லோ பந்துகள் அச்சுறுத்தலானவை. அதோடு தென் ஆப்பிரிக்காவின் 3 வேகப்பந்து வீச்சாளர்களுமே தங்கள் லெந்த்களை கச்சிதமாக வைத்திருந்தனர். நாங்கள் சுதந்திரமாக பேட்டை வீச முடியவில்லை. இதுதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம்.” என்றார்.

SCROLL FOR NEXT