இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஷுப்மன் கில்
மும்பை: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டி ஜூன் 6-ம் தேதி அன்று நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 14-ம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. 2-வது போட்டி 17-ம் தேதி லக்னோவிலும், கடைசி மற்றும் 3-வது போட்டி 20-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான அணி இன்று (மே 19) அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில் மானவ் சுதார் டெஸ்ட் அணியிலும், பிரின்ஸ் யாதவ் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும், ஹர்ஷ் துபே மற்றும் குர்நூர் பிரார் ஆகியோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில் இந்த தொடரில் யார் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்நூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்).
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ் துபே, குர்நூர் பிரார், அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி. (இதில் ரோஹித் மற்றும் ஹர்திக் ஆகியோர் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டி உள்ளது)
முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு: பும்ரா மற்றும் ஜடேஜாவுக்கு டெஸ்ட் அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அக்சர் படேல் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. பிற சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற யோசனையில் தேர்வுக்குழு இருப்பதாக அகர்கர் தெரிவித்தார்.
இந்திய அணியின் சீனியர் பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாட மட்டுமே தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மற்ற பார்மெட் கிரிக்கெட்டுக்கு அவரது உடல் திறன் ஒத்துழைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மற்றொரு இளம் வீரரான ஆகிப் நபி, டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை நெருங்கி வந்து தவறவிட்டார் என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.