விளையாட்டு

35 பந்துகளில் சதம் கண்ட அபிஷேக்: நியூஸி.க்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

வேட்டையன்

வெலிங்டன்: நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இரண்டு ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் மூன்றாவது ஆட்டம் இன்று (அக்.27) வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் ஃபின் ஆலன் 40, டேரில் மிட்செல் 89, பெவன் ஜேக்கப்ஸ் 39 ரன்கள் எடுத்தனர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் விளையாடாத காரணத்தால் இந்திய அணியின் ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றார். அபிஷேக் சர்மா உடன் இணைந்து இன்னிங்ஸை அவர் தொடங்கினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி, 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா, 35 பந்துகளில் சதம் விளாசினார். 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 11 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 5, சஞ்சு சாம்சன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 1 ரன் மற்றும் நமன் திர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த தொடரின் அடுத்த ஆட்டம் வரும் 30-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT