மல்யுத்தத்தில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறி உள்ள நிலையில், அவர்களின் இந்த செயல் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியை நினைவுகூர்வதாக உள்ளது.
அமெரிக்க நாட்டின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான முகம்மது அலி, 1960-ம் ஆண்டு தனது 18-வது வயதில் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் லைட்-ஹெவிவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். 18 வயது இளைஞரின் சாதனையை உலகமே போற்றியது. அதன் பின்னர் அமெரிக்க நாட்டில் தனது சொந்த ஊரான லூயிவில் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளார் முகம்மது அலி. அங்கு வெள்ளையர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில் நிறவெறிக்கு எதிராக தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்யும் வகையில் ஒலிம்பிக் பதக்கத்தை ஒஹையோ ஆற்றில் வீசியுள்ளார்.
இது குறித்து தனது சுயசரிதையில் இப்படி வர்ணித்துள்ளார். “ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நான் பதக்கத்துடன் லூயிவில் வந்தேன். கறுப்பின மக்கள் சாப்பிட முடியாத உணவகம் ஒன்றுக்கு சென்றேன். ஒலிம்பிக் பதக்கத்தை அணிந்தபடி உணவகத்தில் அமர்ந்து, உணவு ஆர்டர் செய்தேன். ஆனால், கறுப்பின மக்களை புண்படுத்தும் வகையிலான வார்த்தையை சொல்லி என்னை அங்கிருந்து வெளியேற்றினர். அதனால் ஒஹையோ ஆற்றில் இறங்கி, எனது பதக்கத்தை தூக்கி எறிந்தேன். அதனால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை” என முகமது அலி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் 1996- அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் போது அவருக்கு மீண்டும் பதக்கம் அளித்து கவுரவித்தது ஒலிம்பிக் கமிட்டி. உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்று சாதனை படைத்தவர் முகமது அலி. 1960-ல் இருந்து 1981 வரை முகமது அலி குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக இருந்தார். 61 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 56-ல் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதில் 37 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றதால் ‘நாக் அவுட் நாயகன்’ என்று அழைக்கப்பட்டார்.