ரயில் நிலையத்தில் ரசிகர்கள் 
விளையாட்டு

ரயில் நிலையத்தில் தூங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

செய்திப்பிரிவு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதுவதாக இருந்தன. இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். ஆனால் திடீரென பெய்த கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டி ரத்து அறிவிப்பு சுமார் இரவு 11 மணி அளவிலேயே வெளியிட்டப்பட்டது. இதனால் போட்டியை காண சென்றிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனினும் மாற்று நாளான திங்கள்கிழைமை (நேற்று) இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் போட்டியை காணும் ஆவலில் ரசிகர்கள் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் தங்கினர். இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் பெரும்பாலானோர் சிஎஸ்கே அணியின் மஞ்சள் சீருடையை அணிந்திருந்தனர்.

SCROLL FOR NEXT