விளையாட்டு

விம்பிள்டன் 4-வது சுற்றில் வாவ்ரிங்கா: வோஸ்னியாகி அதிர்ச்சித் தோல்வி

செய்திப்பிரிவு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா.

நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை அவர் எதிர்கொண்டார். இதில் 6-3,6-3,6-4 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் வாவ்ரிங்கா 4-வது சுற்று வரை முன்னேறினார். அடுத்ததாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் அல்லது ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபஸை வாவ்ரிங்கா எதிர்கொள்ள இருக்கிறார்.

தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 3-வது சுற்றில் இத்தாலியின் சிம்மோன் போலிலையை அவர் வென்றார். முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் 3-6, 6-3, 4-6, 7-6 (7/4), 3-3 என்ற கணக்கில் இருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இறுதி செட்டை 6-4 என்ற கணக்கில் நிஷிகோரி கைப்பற்றி வெற்றியை தனதாக்கினார்.

வோஸ்னியாகி வெளியேறினார்

மகளிர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, செக்.குடியரசின் பார்பராவிடம் 2-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். மகளிர் தரவரிசையில் வோஸ்னியாகி 16-வது இடத்திலும், பார்பரா 43-வது இடத்திலும் உள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லீ நாவை தனது 3-வது சுற்றில் பார்பரா தோற்கடித்து வெளியேற்றினார். அவர் முன்னணி வீராங்கனைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

SCROLL FOR NEXT