போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டது குறித்த அறிவிப்பு 
விளையாட்டு

IPL Final | CSK vs GT: மழை காரணமாக ஆட்டம் நாளை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நாளை (மே 29 - திங்கள்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே 28 - ஞாயிறு) இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மழை காரணமாக திட்டமிட்டபடி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து இரு அணியின் பயிற்சியாளர்களான ஆஷிஷ் நெஹரா, ஸ்டீபன் ஃபிளெம்மிங் மற்றும் போட்டியை நடத்தும் நடுவர்களான நிதின் மேனன், ரோட் டக்கர் கலந்து பேசி போட்டியை நாளை ஒத்திவைத்துள்ளனர். இந்த முடிவு அறிவிக்கப்பட்ட போது மைதானத்தில் மழை பொழிவு இல்லை. இருந்தாலும் ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதம் காரணமாக இந்தப் போட்டி நாளை (திங்கள்) ரிசர்வ் டே அன்று நடத்தப்படுகிறது. நாளை மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் தங்கள் கைவசம் வைத்துள்ள டிக்கெட்டுகள் நாளை செல்லும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ள பார்வையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டி முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால் 5-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் வென்ற அணி என்ற அந்தஸ்தை மும்பைக்கு அடுத்ததாக எட்டும். அதே போல குஜராத் வென்றால் மும்பை மற்றும் சென்னை அணிக்கு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு சீசன்களில் பட்டம் வென்ற அணி என சாதனை படைக்கும்.

SCROLL FOR NEXT