விளையாட்டு

டி20 அணியில் சிராஜ், ஷ்ரேயஸ்; டெஸ்ட் அணியில் மீண்டும் முரளி விஜய்

பிடிஐ

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய டி20 அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 அணியில் புதிய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 வயதான சிராஜ் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார். ஷ்ரேயஸை பொருத்தவரை, இந்தியா ஏ மற்றும் மும்பை அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

மேலும், இந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் ஒன்றில் இரட்டை சதமும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக சதமும் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

நவம்பர் 1ஆம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. ஆஷிஷ் நேஹ்ரா முதல் போட்டிக்கான டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியோடு அவர் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலிக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் அணித் தலைவர் விராட் கோலி ஓய்வெடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விளையாட முடிவெடுத்துள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவுள்ளார். அதே நேரத்தில், அணியில் சுழற்சி முறையில் வீரர்கள் இடம்பெறுவர் என்றும், இது அணித் தலைவருக்கும் பொருந்தும் என்றும் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடருக்கு முரளி விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த இலங்கைத் தொடரில் அவர் இடம் பெறவில்லை. உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சாஹா, புஜாரா என வழக்கமான இந்திய டெஸ்ட் அணி வீரர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களோடு குல்தீப் யாதவ்வும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என எதிர்பாக்கப்படுகிறது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதால், அதற்காகத் தயாராக கோலி இம்முடிவினை எடுப்பார் எனத் தெரிகிறது.

டி20 அணி

விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்தி, தோனி, பாண்டியா, அக்‌ஷர் படேல், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர், பும்ரா, முகமது சிராக், நேஹ்ரா (ஒரு போட்டிக்கு மட்டும்)

டெஸ்ட் அணி

விராட் கோலி, கேஎல் ராகுல், முரளி விஜய், ஷிகர் தவண், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், பாண்டியா, ஷமி, உமேஷ், புவனேஷ்வர், இஷாந்த் சர்மா

SCROLL FOR NEXT