விளையாட்டு

40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை

கார்த்திக் கிருஷ்ணா

ஆஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ரன்களைக் அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் மட்டுமே 40 சிக்ஸர்கள் விளாசியதுதான் ஆட்டத்தின் முக்கிய அம்சம்.

வெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை அன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. அணிக்கு 35 ஓவர்கள் வீதம் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் அகஸ்டா அணி முதலில் ஆடியது.

அணியின் முதல் விக்கெட் பத்து ரன்களுக்கு வீழ்ந்தபோது, இரண்டாவது ஓவரில் டன்ஸ்டன் களமிறங்கியுள்ளார். அவர் எத்தனை பந்துகளில் 307 ரன்களைக் குவித்தார் என்பது ஸ்கோர் அட்டையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 35 ஓவர்கள் போட்டியில் இத்தனை ரன்கள் குவிக்க குறைந்த அளவு பந்துகளே அவர் சந்தித்திருப்பார் என யூகிக்கலாம். ஜோஷ் டன்ஸ்டன் 16 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் தந்து ஆட்டமிழந்திருப்பார். ஆனால் அதை எதிரணி கோட்டை விட்டது.

மேலும் 7வது விக்கெட்டுக்கு சக வீரர் பென் ரஸ்ஸலுடன் இணைந்து 203 ரன்களை டன்ஸ்டன் பார்ட்னர்ஷிப்பில் குவித்திருந்தார். இதில் ரஸ்ஸல் எடுத்தது வெறும் 5 ரன்கள் மட்டுமே. இன்னிங்ஸின் முடிவில் அகஸ்டா அணி 354 ரன்களை குவித்திருந்தது. அதாவது அணியின் ஸ்கோரில் கிட்டத்தட்ட 86.5 சதவித பங்களிப்பு டன்ஸ்டன் அடித்த 307 ரன்கள். இதுவும் ஒரு புது சாதனையாகும்.

இதற்கு முன், 1984ஆம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் மே.இ.தீவுகள் அணி மொத்தமாக 272 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமே 189 ரன்கள் எடுத்திருந்தார். இது அணியின் மொத்த ஸ்கோரில் 69 சதவிதம் ஆகும். இந்த சாதனையை டன்ஸ்டன் தற்போது முறியடித்துள்ளார். சர்வதேச போட்டி சாதனைக்கு ஒப்பான சாதனையாக கருதப்படாவிட்டாலும், டன்ஸ்டனின் இந்த விளாசல் ஆஸ்திரேலிய அணி தேர்வுக்கு அவரது பெயரை பரிந்துரைக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT