விளையாட்டு

'ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரங்கள்': பிளே ஆஃப் போட்டிகளில் பிசிசிஐ-யின் பசுமை முயற்சி

செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கிவிட்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவரும் முதல் பிளே ஆஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தப் போட்டியில் பவுலர்கள் வீசிய ஒவ்வொரு டாட் பாலுக்கும் டிவி ஸ்கோர் கார்டில் புள்ளிக்குப் பதிலாக மரக்கன்று அடையாளம் காட்டப்பட்டது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, நடப்பு பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை முயற்சியாக பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் இந்தியா முழுவதும் 500 மரங்களை நடும் பெரிய முயற்சியை பிசிசிஐ எடுத்துள்ளது.

இதை வெளிப்படுத்தும்விதமாகவே, இன்றைய போட்டியில் இரு அணிகள் தரப்பிலும் போடப்படும் டாட் பால்களின் போது அவை கிரீன் டாட் பால்களாக கணக்கிடப்படுகின்றன. மேலும், பவுலர்கள் டாட் பால் வீசும்போது டிவி ஸ்கோர் கார்டில் புள்ளிக்குப் பதிலாக மரச் சின்னம் காட்டப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT