விளையாட்டு

WTC Final | ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பாடு?

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாத அணிகளில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வகையில் இங்கிலாந்து புறப்பட்டு உள்ளதாக தகவல். இன்று (மே 23) அதிகாலை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் என 20 பேர் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர்.

இதில் பயிற்சியாளர் ராகுல் திராவிட், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நெட் பவுலர்கள் ஆகாஷ் தீப், புல்கிட் நராங்க் ஆகியோரும் தற்போது இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர். நாளை இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் அஸ்வின் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல்.

வரும் 30-ம் தேதி வரையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பகுதி பகுதியாக இங்கிலாந்து செல்கின்றனர். இதற்கு நடப்பு ஐபிஎல் சீசன் தான் காரணம். ரிசர்வ் வீரர்களாக உள்ள ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவும் தங்கள் அணியின் பிளே-ஆஃப் செயல்பாட்டை பொறுத்து தங்கள் இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உனத்கட், வரும் 27-ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறார். அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடி வரும் புஜாரா, விரைவில் அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 7-ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT