பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு வீரர் விராட் கோலி, 61 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூப்ளசி, 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் லோம்ரோர் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த பிரேஸ்வெல் உடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி.
பிரேஸ்வெல், 26 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி, 60 பந்துகளில் சதம் கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் (மொத்தம் 7 சதம்) பதிவு செய்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சதம் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணிக்கு இறுதி கட்டத்தில் கேமியோ இன்னிங்ஸ் ஆடி இருந்தார் அனுஜ் ராவத். 15 பந்துகளில் 23 ரன்கள் அவர் எடுத்திருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது குஜராத். இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. அதை கருத்தில் கொண்டு அந்த அணி பவுலர்களின் செயல்படும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.