ராஞ்சி: தேசிய அளவிலான ஃபெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார் ஜோதி எர்ராஜி. 12.89 நொடிகளில் அவர் பந்தய தூரத்தை கடந்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள தகுதியை அவர் பெற்றுள்ளார். இதனை இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வரும் ஜூலை மாதம் பாங்காக் நகரில் ஆசிய சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளது. மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டுதலில் தமிழகத்தின் ஆர்.நித்யா ராம்ராஜ் இரண்டாம் இடம் பிடித்தார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சப்னா குமாரி மூன்றாம் இடம் பிடித்தார்.
110 மீட்டர் ஆடவர் தடை தாண்டுதலில் மகாராஷ்டிராவின் தேஜஸ் அசோக் தங்கம் வென்றார். 13.72 நொடிகளில் அவர் பந்தய தூரத்தை கடந்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி இன்று நிறைவடைகிறது.