க்ருணல் பாண்டியா 
விளையாட்டு

மும்பைக்கு எதிரான போட்டியில் 'Retire Hurt' கொடுத்தது ஏன்? - க்ருணல் பாண்டியா விளக்கம்

செய்திப்பிரிவு

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது லக்னோ அணி. இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்டியா, 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார்.

அவரது செயல் சமூக வலைதளத்தில் விவாதமானது. அவர் ஏமாற்று வேலை செய்கிறார் என சலசலப்பு எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வினும் ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் அது குறித்து க்ருணல் பாண்டியா விளக்கம் கொடுத்துள்ளார். அந்த போட்டி முடிந்ததும் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

“ஆட்டத்தின் போது எனக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. அதனால் மேற்கொண்டு என்னால் பேட் செய்ய முடியவில்லை. நான் எப்போதுமே டீம் பிளேயர். அதனால் அணிக்காக வேண்டி அதை செய்தேன்” என க்ருணல் சொல்லி இருந்தார்.

லக்னோ அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. அந்த இன்னிங்ஸில் 16 ஓவர்கள் முடிந்த நிலையில் அவர் 'ரிட்டயர்ட் ஹெர்ட்' கொடுத்து வெளியேறினார். 16-வது ஓவரின் போது ரன் எடுக்க முயன்ற அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இருந்தும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 4 ஓவர்கள் வீசி இருந்தார். அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘க்ருணல் பாண்டியா, ரிட்டயர்ட் ஹர்ட் அல்லது அவுட்' கொடுத்தாரா என்ற கேள்வி சமூக வலைதளத்தில் எழுந்தது. இது குறித்து அஸ்வினும் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ‘ஏமாற்று வேலை’ என பதில் ட்வீட் போட்டிருந்தார். ‘கிரிக்கெட் விதிகள் அனுமதிக்கின்றன. இதில் ஏமாற்று வேலை எதுவும் இல்லை’ என அஸ்வின் ரிப்ளை செய்தார்.

SCROLL FOR NEXT