அர்ஜுன் டெண்டுல்கர் 
விளையாட்டு

IPL 2023 | அர்ஜுன் டெண்டுல்கரின் இடது கையில் நாய் கடித்து காயம்

செய்திப்பிரிவு

லக்னோ: மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கரின் இடது கையில் நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. இன்று லீக் போட்டியில் மும்பை அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் அவர் காயமடைந்துள்ளார். இது மும்பை ரசிகர்களுக்கு கவலை தரும் தகவலாக அமைந்துள்ளது. இந்தப் போட்டி லக்னோ நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முயலும்.

எல்எஸ்ஜி அணி பகிர்ந்துள்ள வீடியோவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. லக்னோ அணி வீரர் யுத்விர் சிங் உடன் அர்ஜுன் டெண்டுல்கர் பேசுகையில் தன்னை நாய் கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 13-ம் தேதி நாய் அவரை கடித்துள்ளது. அதன் காரணமாக அவரால் வலை பயிற்சியில் ஈடுபட முடியவில்லை என தெரிகிறது. அவர் விரைந்து குணம் பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இடது கை பந்து வீச்சாளரான அர்ஜுன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன். 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன், நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT