இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலிய அணியையும் ஒருநாள் போட்டித் தொடரில் வென்றதால் தன்னம்பிக்கையின் உச்சத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அபார வளர்ச்சி, குல்தீப் யாதவ், சாஹல் கூட்டணியின் திடீர் எழுச்சி ஆகிய காரணங்களால் இந்திய அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை 4-1 என வீழ்த்திய நிலையில், டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெல்வதை கோலியின் படை லட்சியமாகக் கொண்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து அந்த அணியை 3-0 என்ற கணக்கில் டி20 போட்டியில் வீழ்த்திய இந்திய அணிக்கு இது சாத்தியமே என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். இந்த இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 12 டி20 போட்டிகளில் இந்தியா 9 போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஹர்திக் பாண்டியா, டி20 போட்டியில் எப்படி செயல்படப் போகிறார் என்பதை இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசியதுடன் 222 ரன்களையும் குவித்த பாண்டியா, வேகத்துக்கு பேர்போன டி20 போட்டியிலும் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனைவியின் உடல்நிலை காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஷிகர் தவணின் வருகையும் இந்திய அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கக்கூடும். அவர்களுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி, கேதார் ஜாதவ் ஆகியோரும் சேர்ந்து மிரட்டும் பட்சத்தில் இந்திய அணியிடம் இருந்து ரன் மழையை எதிர்பார்க்கலாம்.பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல் என்று சமீப காலமாக அசத்திவரும் இந்திய பந்துவீச்சு வரிசையில் தற்போது அனுபவம் வாய்ந்த நெஹ்ராவும் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஆஷஸ் தொடரை எதிர்கொள்வதற்கு முன்பு, தங்கள் தன்னம்பிக்கையை கூட்டும் வகையில் இந்த டி 20 தொடரில் வெல்ல நினைக்கிறது. கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித், கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்தைக்கூட அடிக்காதது அந்த அணிக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 இன்னிங்ஸ்களில் 347 ரன்களை மட்டுமே அடித்துள்ள அவர், இந்த டி20 தொடரில் எப்படி ஆடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஸ்மித்தைப் போலவே மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோரையே அந்த அணி பெரிதும் சார்ந்துள்ளது. இதில் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் பின்ச் 3 ஆட்டங்களில் 250 ரன்களையும், வார்னர் 5 ஆட்டங்களில் 245 ரன்களையும் எடுத்துள்ளனர். நாதன் கோல்டர் நைல், கம்மின்ஸ், ஆடம் ஸம்பா ஆகியோரைச் சார்ந்தே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு உள்ளது.
இதற்கிடைய ராஞ்சியில் நேற்று மழை பெய்தது. இதனால் இந்திய அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இன்று நடைபெற உள்ள டி 20 ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
போட்டி நேரம்: மாலை 7.00
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்