சஹல் 
விளையாட்டு

‘லெஜெண்ட்’ சஹல்: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை!

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். பவுண்டரிகளுக்கு துளியும் பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் ஒரு பவுலராக சாதித்துள்ளார் சஹல். மிக எளிதாக அலட்டல் எதுவும் இல்லாமல் ‘லெக் ஸ்பின்’ வீசும் கலையில் கைதேர்ந்த பவுலரான சஹல் ஒரு ஜீனியஸ்.

2013 முதல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறார் சஹல். மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் என மூன்று அணிகளுக்காக அவர் தனது பங்களிப்பை வழங்கி உள்ளார். தற்போது ராஜஸ்தான் அணியின் ஆஸ்தான ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர்.

143 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 520.5 ஓவர்களை வீசியுள்ளார். 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளுக்கு கூடுதலாக 7 முறை கைப்பற்றியுள்ளார். நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

20 விக்கெட்டுகளுக்கும் கூடுதலாக 5 சீசன்களில் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முறையே 2015, 2016, 2020, 2022, 2023 என அது உள்ளது. பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘மாடர்ன் டே’ கிரிக்கெட்டில் ‘கட்டம் கட்டி’ கலக்கி வருகிறார் சஹல்.

அதற்கு ஒரு உதாரணம் நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான 56-வது லீக் போட்டி. 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சஹல் கைப்பற்றினார். நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், தாக்கூர் மற்றும் ரிங்கு சிங். இதில் வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் அற்புத ரகம். இடது கை பேட்ஸ்மேனான வெங்கடேஷ் ஐயருக்கு ஆஃப் திசையில் வெளியே செல்லும்படி பந்தை வீசி, அவரை ஷாட் ஆட நிர்பந்தித்து அவுட் செய்திருப்பார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள்

  • 187 - யுஸ்வேந்திர சஹல்
  • 183 - டுவைன் பிராவோ
  • 174 - பியூஷ் சாவ்லா
  • 172 - அமித் மிஸ்ரா
  • 171 - அஸ்வின்

லெஜெண்ட் என புகழ்ந்த சஞ்சு சாம்சன்: “சஹலுக்கு ‘லெஜெண்ட்’ என பட்டம் கொடுக்க வேண்டிய நேரம் இது என நான் நினைக்கிறேன். அவர் எங்கள் அணியில் இருப்பது சிறப்பு. அவரிடம் எதுவும் பேச வேண்டிய அவசியம் இல்லை. பந்தை கொடுத்தால் போதும், என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் ஓவர்களில் பந்து வீசுவது அணியின் கேப்டனாக எனக்கு சாதகம்” என கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்திருந்தார். ‘பிராவோ’ சஹல். நீங்கள் ஐபிஎல் களத்தில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

SCROLL FOR NEXT