ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தாலும், மோஹித் சர்மாவின் அபார பந்துவீச்சாலும் குஜராத் அணி வெற்றி கண்டது.
குஜராத், லக்னோ அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவும், ஷுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்கள்குவித்தது. சாஹா 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கில்லுடன் இணைந்த டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடினார். இருவரும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். இறுதியில் ஷுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்களும் (2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்), டேவிட் மில்லர் 12 பந்துகளில் 21 ரன்களும் (2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் விளையாடிய லக்னோ அணியின் கைல் மேயர்ஸும், குயின்டன் டி காக்கும் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 88-ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 48 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்த தீபக் ஹூடா 11, மார்க்கஸ் ஸ்டாயினிஸ் 4 ரன்களில் வீழ்ந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் 41 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார்.
அதன்பின்னர் வந்த வீரர்களில் ஆயுஷ் பதோனி மட்டும் 21 ரன்கள் சேர்த்தார். ஸ்வப்னில் சிங் 2, கிருணல் பாண்டியா 0, ரவி பிஷ்னோய் 4 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி கண்டது. குஜராத் அணி சார்பில் மோஹித் சர்மா 4, ரஷித் கான், மொகமது ஷமி, நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
78: நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்பிளே ஓவர்களில் 78 ரன்களைக் குவித்தது. பவர்பிளே ஓவர்களில் அந்த அணி குவித்த அதிகபட்ச ரன்களாகும் இது. இதற்கு முன்பு சிஎஸ்கே அணிக்கெதிராக பவர்பிளே ஓவர்களில் 65 ரன்களும் (2023-ம் ஆண்டு), ராஜஸ்தான் அணிக்கு எதிராக 64 ரன்களும் (2022-ம் ஆண்டு), ஹைதராபாத் அணிக்கெதிராக 59 ரன்களும் (2022-ம் ஆண்டு) குவித்திருந்தது.
227: நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி ஐபிஎல் போட்டிகளில் 227 ரன்கள் எடுத்து தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்பு 2023-ல் மும்பைக்கு எதிராக 207 ரன்களும், கொல்கத்தாவுக்கு எதிராக 204 ரன்களும் (2023), ஹைதராபாத்துக்கு எதிராக 199 ரன்களும் (2022) அந்த அணி எடுத்திருந்தது.
4: நேற்றைய ஆட்டத்தில் 227 ரன்கள் எடுத்து ஐபிஎல் 2023 சீசனில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் 4-வது இடத்தை குஜராத் அணி பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் லக்னோ அணியும் (257 ரன்கள்), 2-ம் இடத்தில் சிஎஸ்கே அணியும் (235 ரன்கள்), 3-ம் இடத்தில் ஹைதராபாத் அணியும் (228 ரன்கள்) உள்ளன.