ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி பந்தை நோ-பாலாக வீசி இருந்தார் ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா. அந்தப் பந்தை லாங்-ஆஃப் திசையில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்திருந்தார் சமாத். இருந்தும் அது நோ-பால் என்பதால் தப்பித்த அவர் சிக்ஸர் விளாசி தன் அணியை வெற்றி பெற செய்தார்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஹைதராபாத் அணி விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் அன்மோல்பிரீத் சிங்கும், அபிஷேக் சர்மாவும். பின்னர் ராகுல் திரிபாதி உடன் 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் அபிஷேக். 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அபிஷேக் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கிளேசன் (26 ரன்கள்), திரிபாதி (47 ரன்கள்), கேப்டன் மார்க்ராம் (6 ரன்கள்), பிலிப்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ், 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்துல் சமாத், 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் பிலிப்ஸ் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அவுட் ஆகி இருந்தார். கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சந்தீப் சர்மா வீசி இருந்தார். முதல் 5 பந்துகளில் 12 ரன்களை அவர் கொடுத்திருந்தார். கடைசி பந்தில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, அந்தப் பந்தை நோ-பாலாக வீசி கையில் இருந்த வெற்றியை ஹைதராபாத் வசம் கொடுத்தது ராஜஸ்தான் அணி.