ஹவானா: தமிழ்நாட்டை சேர்ந்த 21 வயதான தடகள வீரர் பிரவீன் சித்ரவேல், ட்ரிப்பிள் ஜம்பில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற ‘ப்ரூபா டி கான்ஃப்ரான்டேசியன் தடகள மீட்’-டில் 17.37 மீட்டர் தூரம் கடந்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் இந்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இருப்பினும் இதனை இந்திய தடகள கூட்டமைப்பு முறைப்படி அங்கீகரிக்க வேண்டி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அவர் இதில் 17 மீட்டருக்கு மேல் நான்கு முறை கடந்துள்ளார். முதல் முயற்சியில் 17.14 மீட்டர், நான்காவது முயற்சியில் 17.08 மீட்டர், ஐந்தாவது முயற்சியில் 17.37 மீட்டரை அவர் கடந்தார். அதோடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இதற்கான தகுதி 17.20 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 17.17 மீட்டர் கடந்து ஆசிய விளையாட்டுக்கு அவர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை அன்று அவர் தங்கம் வென்றுள்ளார்.
‘நடப்பு ஆண்டில் 17.40 மீட்டருக்கு மேல் கடக்க இலக்கு வைத்துள்ளேன். 17.40 அல்லது 17.50 மீட்டராக அது இருக்க வேண்டும்’ என பிரவீன் சித்ரவேல் கடந்த பிப்ரவரியில் தெரிவித்திருந்தார். கடந்த 2016-ல் ரஞ்சித், 17.30 மீட்டர் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அதை தற்போது பிரவீன் தகர்த்துள்ளார்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வா பிரபு திருமாறன் நான்காவது இடம் பிடித்துள்ளார். அவர் 16.59 மீட்டர் கடந்திருந்தார். இது அவரது தனிப்பட்ட சாதனையாக அமைந்துள்ளது.
வழக்கமாக ஊக்க மருந்து சோதனைக்கு பிறகே இந்திய தடகள கூட்டமைப்பு தேசிய சாதனையை அங்கீகரிக்கும். ஹவானா மீட்டில் தங்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு அங்கு ஊக்க மருந்து சோதனை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டி உள்ளதாக தேசிய தலைமை பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார்.