தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு விக்கெட் மட்டுமே கையில் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 172 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 166.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்கர் 103 ரன்களும், டுமினி 100 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், சுரங்கா லக்மல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. ஜே.கே.சில்வா 8, உபுல் தரங்கா 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் ஜே.கே.சில்வா முந்தைய நாள் எடுத்திருந்த ரன்களுடனேயே வெளியேறினார். பின்னர் வந்த சங்ககாரா 24 ரன்களிலும், ஜெயவர்த்தனா 3 ரன்களிலும் வெளியேற, மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது தனி நபராகப் போராடிய தரங்காவை வீழ்த்தினார் டுமி்னி. 7 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற தரங்கா 155 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
மேத்யூஸ் போராட்டம்
இதையடுத்து திரிமானியுடன் இணைந்தார் கேப்டன் மேத்யூஸ். நிதானமாக ஆடிய இந்த ஜோடி இலங்கையின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது. 28.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த ஜோடி, இலங்கை 190 ரன்களை எட்டியபோது பிரிந்தது. 98 பந்துகளைச் சந்தித்த திரிமானி 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த தினேஷ் சன்டிமல் 6 ரன்களிலும், தில்ருவான் பெரேரா ரன் ஏதுமின்றியும் நடையைக் கட்ட, மேத்யூஸுடன் இணைந்தார் ரங்கானா ஹெராத். நிதானமாக ஆடிக் கொண்டிருந்த மேத்யூஸ், மோர்கல் வீசிய 79-வது ஓவரில் 5 பவுண்டரிகளை அடித்து 114 பந்துகளில் அரைசதம் கண்டார். இதுதவிர இலங்கையின் கேப்டனாக விளையாடி 1000 ரன்களைக் (17 இன்னிங்ஸ்) கடந்தார்.
ஒருமுனையில் ஹெராத்தை வைத்துக் கொண்டு மறுமுனையில் இலங்கையை மீட்க போராடிய மேத்யூஸ், 182 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து களமிறங்கிய சுரங்கா லக்மல் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதோடு 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆட்டநேர முடிவில் இலங்கை 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 5 விக்கெட்டுகளையும், மோர்கல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஸ்டெயின் சாதனை
இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை கட்டுக்குள் கொண்டு வந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் டெஸ்ட் போட்டியில்
23-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுதவிர ஆசிய மண்ணில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆசியர் அல்லாத ஒரு வீரர் ஆசிய மண்ணில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை சமன் செய்தார். ஸ்டெயின் தவிர, ரிச்சர்ட் ஹெட்லி, கோர்ட்னி வால்ஷ் ஆகியோரும் ஆசிய மண்ணில் 5 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.