ஐரோப்பிய சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, ஜெர்மனி வீரர் டோனி குரூஸுடன் 6 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. பேயர்ன் மூனிச் அணிக்காக விளையாடி வந்த டோனி குரூஸ், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலக்கியதன் மூலம் தற்போது ரியல் மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனியின் மிட்பீல்டில் மிகப்பெரிய பலமாகத் திகழந்த இந்த 24 வயது டோனி குரூஸ், இரு கோல்களையும் அடித்தார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம், “இப்போது நாங்கள் வாங்கியிருக்கும் டோனி குரூஸ் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். எந்த சூழ்நிலையிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறமை கொண்ட வீரர். போட்டியின் சூழலை சரியாகக் கணித்து சகவீரர்களுக்கு உதவக்கூடியவர். கார்னர் கிக் போன்ற வாய்ப்புகளில் மிக சாதுர்யமாக செயல்படக்கூடியவர்” என குறிப்பிட்டுள்ளது.
பேயர்ன் மூனிச் அணிக்காக விளையாடி வந்த டோனி குரூஸின் ஒப்பந்தம் அடுத்த சீசனோடு முடிவடைகிறது. அதனால் அவர் மான்செஸ்டர் யுனைடெட் அல்லது செல்சீ அணிக்கு தாவலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ரியல் மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார். இதன்மூலம் டோனி குரூஸின் புதிய அணி தொடர்பாக நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பேயர்ன் மூனிச் அணியில் தனது 17-வது வயதில் இணைந்த டோனி குரூஸ், பின்னர் பேயர்ன் லெவர்குசன் அணிக்காக 18 மாதகாலம் தற்காலிகமாக ஆடினார். அதன்பிறகு 2010-ல் ஜெர்மனி அணியில் இடம் பிடித்தார்.
சாம்பியன்ஸ் லீக், புந்தேஸ்லிகா, உலகக் கோப்பை என எல்லாவற்றையும் வென்றுவிட்ட டோனி குரூஸ், இந்த மாதத்தில் ஸ்பெயின் லீக் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 2-வது வீரர் ஆவார். முன்னதாக உருகுவேயின் லூயிஸ் சுரேஜ், மான்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து பார்சிலோனாவுக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.