பானி பூரி விற்பனை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஹீரோவாக மாறி இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்.
2020-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஜெய்ஸ்வால். நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான கிரிக்கெட் லீக் போட்டியில் மிகவும் அற்புதமாக விளையாடி ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஜெய்ஸ்வால்.
62 பந்துகளைச் சந்தித்து 124 ரன்களைக் குவித்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினார். இதில் 8 பந்துகளை இமாலய சிக்ஸர்களாக விளாசியிருந்தார். அவரது ஸ்கோரில் 16 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை மிகுந்த வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். இந்த சீசனில் ஜாஸ் பட்லருடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி வருகிறார் அவர். இந்த சீசனில் இதுவரை 3 அரை சதங்கள் விளாசிய ஜெய்ஸ்வால், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சதமடித்து அனைவரது கவனத்தையும் மொத்தமாக ஈர்த்துள்ளார். மேலும் இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்தியுள்ளார். 159.70 ஸ்டிரைக் ரேட்டுடன் 428 ரன்களை குவித்துள்ளார் யஷஸ்வி. இன்று ஐபிஎல் ஹீரோவாக இருந்தபோதிலும் இந்த இடத்தை அடைய அவர் செய்த முயற்சிகள் ஏராளம்.
2001-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சூரியவான் பகுதியில் பிறந்த ஜெய்ஸ்வால் 11 வயதிலேயே கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தால் மும்பைக்கு வந்துவிட்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிரிக்கெட் மீது அவருக்கு அத்தனை பிரியம். மும்பையில் அவரது மாமா வீட்டில் தங்கி கிரிக்கெட் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
தனது வெற்றி குறித்து ஜெய்ஸ்வால் கூறும்போது, “நான் 11 வயதிலேயே மும்பைக்கு வந்துவிட்டேன். மாமா வீட்டில் சிறிது காலம் தங்கினேன். அவர்கள் குடும்பத்துக்கே அந்த இடம் போதாததால் என்னை வேறு இடத்தில் தங்குமாறு மாமா கூறிவிட்டார். பின்னர் சிலகாலம் ஒரு மாட்டுப் பண்ணையில் தூங்கி காலத்தைக் கழித்தேன். அந்த இடமும் நிலைக்காததால் மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில் உள்ள கூடாரத்தில் தங்கினேன். பகலில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு இரவில் அதே மைதானத்தில் தூங்குவேன். பின்னர் இரவு 11 மணிக்குப் பிறகு பானிபூரி விற்பனை செய்வேன். பானிபூரி விற்பனை செய்த பணத்தைத் தான் நான் சாப்பிடுவதற்கும், கிரிக்கெட் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவேன்.
சில வருடங்கள் வரை பானி பூரி விற்றேன். அதன் பின்னர் சில கிரிக்கெட் கிளப்களில் விளையாட இடம் கிடைத்தது. எனது பயிற்சியாளர் ஜுவாலா சிங் கண்ணில் படும் வரை எனது கஷ்ட நிலை தொடர்ந்தது.
அதன் பிறகு எனது நிலைமை மாறியது. எனக்குப் பாதுகாவலராக மாறினார் பயிற்சியாளர் ஜுவாலா சிங். அவர்தான் எனது குரு, வழிகாட்டி, ஆலோசகர்.
எனது கனவைப் பின்பற்றி அதற்காக கடினமாக உழைக்க விரும்புகிறேன். என்னுடைய பாணியில் எனது விளையாட்டை நான் விளையாடுகிறேன். எனது கனவை நனவாக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியாளர் ஜுவாலா சிங் கூறும்போது, “ஜெய்ஸ்வால் சிறிய பையனாக இருக்கும்போதே அவரை நான் பார்த்து வியந்துள்ளேன். அவன் விளையாட்டைப் பார்க்கும்போதே என்னையே நான் அவனுள் பார்த்தேன். அதனால் அவன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு உதவினேன்" என்றார்.
ஜுவாலா சிங்கின் பார்வை ஜெய்ஸ்வால் மீது விழுந்ததும், அவருடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. கிரிக்கெட் வாழ்க்கையும் கைகூடியது. 2019-ல் மும்பை அணியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைத்தது. அப்போது ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டியில் இளம்வயதிலேயே இரட்டை சதமடித்து சாதனை புரிந்தார்.
ஐபிஎல் சீசன் 2020-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு இந்திய அணியில் (19 வயதுக்குட்பட்டோர்) தேர்வாகி, அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடம்பிடித்தார். 2020 முதல் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போதிலும் போதிய ரன்களை அவர் சேர்க்கவில்லை.ஆனால் இந்த ஆண்டு நிலைமை வேறாக இருந்தது. பட்லருடன் இணைந்து அவர் ஜுகல் பந்தி விருந்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.ஒரு முனையில் ஜாஸ் பட்லர் பந்துகளை பறக்க விட்டுக்கொண்டிருக்க.... மறுபுறம் ஜெய்ஸ்வால் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ரோஹித்தின் நம்பிக்கையை பெற்றுள்ள ஜெய்ஸ்வால் தேசிய அணியில் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா கூறும்போது, “மிகவும் சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடுகிறார் ஜெய்ஸ்வால். இந்த சீசனில் கிரிக்கெட் விளையாட்டை புதிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார் அவர். இது ராஜஸ்தான் அணிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல விஷயம்" என்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான டாம் மூடி, “யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான திறமை படைத்தவர். சிறப்பாக தனது கேமை விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" என்று பெருமை பொங்கக் கூறுகிறார்.