விளையாட்டு

நமன் ஓஜா அதிரடிக்கு மிட்செல் மார்ஷ் பதிலடி; 522 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ஏ

செய்திப்பிரிவு

பிரிஸ்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஏ, இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா ஏ அணி தன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்துள்ளது.

நேற்று 250 பந்துகளில் 29 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் நமன் ஓஜா 219 ரன்கள் விளாசினார். அதற்கு இன்று மிட்செல் மார்ஷ் பதிலடி கொடுத்தார்.

99/6 என்ற நிலையிலிருந்து சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் 21 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 211 ரன்கள் விளாச, இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய எஸ்.எம்.ஒயிட்மேன் என்பவர் தன் பங்கிற்கு 174 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 86 ஓவர்களில் 371 ரன்களை விளாசினர். 124/6 என்று துவங்கி இன்று மட்டும் சுமார் 500 ரன்களுக்கு சற்று குறைவாக விளாசியுள்ளது ஆஸ்திரேலியா ஏ.

99/6 என்ற நிலையிலிருந்து அடுத்த விக்கெட் 470 ரன்களிலேயே விழுந்தது. முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஜோடி சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்கள் 460 ஆகும். பஞ்சாப் அணிக்காக புபிந்தர் சிங் ஜூனியர், பங்கஜ் தர்மானி டெல்லிக்கு எதிராக இந்த உலகச் சாதனையை நிகழ்த்தினர். இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்ட ஆண்டு 1994-95.

மிட்செல் மார்ஷுடன் ஆடிய ஒயிட்மேன் 278 பந்துகளில் 26 பவுண்டரி ஒரு சிக்சருடன் 174 ரன்களை எடுத்தார்.

மிட்செல் மார்ஷின் இந்த இன்னிங்ஸை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் பார்த்துள்ளார். இவரது சகோதரர் ஷான் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியில் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்து வருகிறார். ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் இடத்திற்கு இப்போது இந்த இன்னிங்ஸ் மூலம் மிட்செல் மார்ஷ் தனது பெயரை வலுவாகப் பரிந்துரை செய்துள்ளார்.

மார்ஷ், ஒயிட்மேன் இருவரும் தோல்வியிலிருந்து அணியை அதிரடி இன்னிங்ஸினால் மீட்டுள்ளனர். இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக வீசிய பும்ரா 39 ஓவர்களை வீசி 8 மைடன்களுடன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிராக்யன் ஓஜா 35 ஓவர்களில் 5 மைடன்களுடன் 163 ரன்கள் கொடுத்தார். இவரது பந்து வீச்சு விளாசப்பட்டது.

நாளை ஆட்டத்தின் கடைசி நாள்.

SCROLL FOR NEXT